உதவி மையம் மூலம் வன்முறைகளால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஆதரவு அளிக்கப்படும் கலெக்டர் தகவல்


உதவி மையம் மூலம் வன்முறைகளால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஆதரவு அளிக்கப்படும் கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 6 Jun 2019 4:30 AM IST (Updated: 6 Jun 2019 12:41 AM IST)
t-max-icont-min-icon

உதவி மையம் மூலம் வன்முறைகளால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஆதரவு அளிக்கப்படும் என கலெக்டர் சுரேஷ் குமார் தெரிவித்துள்ளார்.

நாகப்பட்டினம்,

நாகை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் சமூக நலத்துறை சார்பில் ஒன் ஸ்டாப் சென்டர் (ஓ.எஸ்.சி.) தொடர்பான ஆய்வு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் சுரேஷ்குமார் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

இந்திய அரசால் நாடு முழுவதும் உள்ள அனைத்து மாநிலங்களிலும் ஓ.எஸ்.சி. சென்டர் செயல்படுத்தப்பட உள்ளது. அதன்படி தமிழக அரசால் சமூகநலம் மற்றும் சத்துணவு திட்ட துறையின் கீழ் அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட சமூகநல அலுவலகத்தின் கீழ் ஓ.எஸ்.சி. சென்டரை தொடங்க ஆணையிடப்பட்டுள்ளது.

குடும்பம், சமூகம் மற்றும் பணிபுரியும் இடங்களில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஆதரவு அளித்திடவும் உதவி செய்திடவும் ஒன் ஸ்டாப் சென்டர் தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அனைத்து வயது நிலையில் உள்ள உடல்ரீதியாக, மனரீதியாக, பாலியல் ரீதியாக மற்றும் அனைத்து வகையான வன்முறைகளாலும் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு வயது, கல்வி, சாதி, திருமணநிலை ஆகியவற்றுக்கு அப்பாற்பட்டு ஆதரவளிக்கப்படும்.

ஒன் ஸ்டாப் சென்டருடன் பெண்களுக்கான உதவி மைய அழைப்பு எண் 181 ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. அரசு மற்றும் அரசு சாரா நிறுவனங்கள், பெண்கள் பணிபுரியும் விடுதி உள்ளிட்ட இடங்களுக்கு அருகிலோ, மருத்துவ வசதி பெறுவதற்கு ஏதுவாக தலைமையிடத்தில் இருந்து 2 கி.மீ தொலைவிற்குள், அனைத்து உட்கட்டமைப்புடன் ஒன் ஸ்டாப் சென்டர் செயல்படும். 2019-20-ம் ஆண்டில் ஒன் ஸ்டாப் சென்டர் கட்டிடத்தில் மகளிர் சக்திகேந்திரா, மகளிர் உதவி மைய எண் 181-க்கான அலுவலகத்தையும் தேவைப்படும் பட்சத்தில் ஒருங்கிணைத்து செயல்படுத்த முடியும்.

ஒன் ஸ்டாப் சென்டர் மூலம் வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உதவி மற்றும் மீட்புப்பணிகளை தேசிய சுகாதார அமைப்பு, 108 அழைப்பு பணி, போலீஸ்துறை வாகனம் மூலம் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உதவிகள் செய்யப்பட வேண்டும். பாதிக்கப்பட்ட பெண்களுக்கு சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறையின் மூலம் மருத்துவ உதவிகளும், போலீஸ் துறை மூலம் முதல் தகவல் அறிக்கை மற்றும் குடும்ப நிகழ்வு அறிக்கை பதிவு செய்யப்படும். ஒன் ஸ்டாப் சென்டரில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு மனநல ஆலோசகர் மூலம் ஆலோசனை மற்றும் மாவட்ட சட்ட பணிகள் ஆணையம் மூலம் சட்டரீதியிலான ஆலோசனை அவர்களுக்கு வழக்கறிஞர் நியமித்து அனைத்து உதவிகள் வழங்கப்படும். ஒன் ஸ்டாப் சென்டர் கட்டிடம் கட்டுவதற்கு 3 ஆயிரம் சதுர அடி அளவுள்ள இடம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் ஒதுக்கீடு செய்து ஆணையிடப்பட்டுள்ளது.

தற்போது இந்த சென்டர் கடந்த பிப்ரவரி மாதம் முதல் மாவட்ட கலெக்டரின் ஒப்புதலின் பேரில், மாவட்ட சமூகநல அலுவலர் மூலம் தனியார் தொண்டு நிறுவனத்தில் தற்காலிகமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. குடும்பத்திலும், சமூகத்திலும் மற்றும் பணிபுரியும் இ்டங்களிலும் பெண்களுக்கு எதிராக நிகழும் வன்முறைகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவு அளித்திடவும், தங்கும் வசதியுடன் பாதுகாப்பு அளித்திடவும் இந்த சென்டர் தொடங்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பெண்கள் நாகை மாவட்ட சமூகநல அலுவலரை தொடர்பு கொண்டு உதவிகளை பெற்று கொள்ளலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

அதைத்தொடர்ந்து பெண்கள் பாதுகாப்பினை வலியுறுத்தும் விழிப்புணர்வு சுவரொட்டிகளை மாவட்ட கலெக்டர் வெளியிட்டார். இதில் கஜா புயல் மறு சீரமைப்பு மற்றும் புனரமைப்பு திட்ட இயக்குனர் பிரதீப் குமார், மாவட்ட வருவாய் அலுவலர் இந்துமதி, நாகை உதவி கலெக்டர் கமல்கிஷோர் உள்பட அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

Next Story