கஜா புயலால் சாய்ந்த மரங்களை துண்டுகளாக்க வாடகைக்கு எந்திரங்கள் கலெக்டர் உமா மகேஸ்வரி தகவல்


கஜா புயலால் சாய்ந்த மரங்களை துண்டுகளாக்க வாடகைக்கு எந்திரங்கள் கலெக்டர் உமா மகேஸ்வரி தகவல்
x
தினத்தந்தி 6 Jun 2019 4:30 AM IST (Updated: 6 Jun 2019 1:46 AM IST)
t-max-icont-min-icon

கஜா புயலால் சாய்ந்த மரங்களை துண்டுகளாக்க வேளாண்மை பொறியியல் துறையின் மூலம் எந்திரங்கள் வாடகைக்கு வழங்கப்படும் என கலெக்டர் உமா மகேஸ்வரி தெரிவித்து உள்ளார்.

புதுக்கோட்டை,

புதுக்கோட்டை மாவட்டம், கஜா புயலினால் மிகுந்த பாதிப்படைந்தது. புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தமிழக அரசு சார்பில், தொடர் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் சீரமைப்பு பணிகளை சிறப்பாக மேற்கொள்ளும் வகையில், அலுவலர்கள் மூலம் ஆய்வு கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் கஜா புயலினால் பாதிக்கப்பட்டு உள்ள புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகளுக்காக, அவர்களது நிலங்களில் முறிந்த, வேரோடு சாய்ந்து உள்ள மரங்களை சிறுதுண்டுகளாக அறுத்து அப்புறப்படுத்துவதற்கு ஏதுவாக 150 கனரக வகை மரம் அறுக்கும் கருவிகள், வேளாண்மை பொறியியல் துறையின் மூலம் தமிழக அரசினால் வழங்கப்பட்டு உள்ளது.

இவற்றினை வேளாண்மை பொறியியல் துறையின் உபகோட்டங்களான அறந்தாங்கி மற்றும் புதுக்கோட்டை அலுவலகங்கள் வாயிலாக விவசாயிகளுக்கு குறைந்த வாடகையாக ஒரு மணி நேரத்திற்கு ரூ.85 என்ற அடிப்படையில் மொத்தம் 150 கனரக வகை மரம் அறுக்கும் கருவிகள் வழங்கப்பட்டு விவசாயிகளால் பயன்படுத்தப்பட்டு வருகிறது. வேரோடு சாய்ந்த, முறிந்த தென்னை மரங்களின் ஓலைகள் மற்றும் முறிந்த மரக்கிளைகளை டிராக்டருடன் பொருத்தப்பட்ட துகளாக்கும் கருவியினை கொண்டு துகளாக்கி விவசாய நிலங்களில் உரமாக பயன் படுத்தலாம்.

வேளாண்மை துறை மூலம்

இதனை கருத்தில் கொண்டு 4 டிராக்டருடன் பொருத்தப்பட்ட தென்னை ஓலையை துகளாக்கும் கருவிகள், வேளாண்மை பொறியியல் துறையின் மூலம் புதுக்கோட்டை மாவட்டத்திற்கு வழங்கப்பட்டு மணிக்கு ரூ.340 என்ற குறைந்த வாடகை அடிப்படையில் டிராக்டருடன் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு விவசாயிகளால் நல்ல முறையில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த எந்திரங்கள் யாவும் வேளாண்மை பொறியியல் துறையின் மூலம் விவசாயிகளுக்கு குறைந்த வாடகைக்கு வழங்கப்படுவதால் கஜா புயலினால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் அனைவரும் இவற்றினை முன்னுரிமை அடிப்படையில் வேளாண்மை பொறியியல் துறை செயற்பொறியாளர், உதவி செயற்பொறியாளர் மற்றும் சம்பந்தப்பட்ட வட்டார வேளாண்மை உதவி இயக்குனர், வேளாண்மைத் துறை அலுவலகங்களில் பதிவு செய்து பயன்படுத்தி கொள்ளலாம்.

இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார். 

Next Story