பள்ளி-கல்லூரி விடுதிகளில் சேர மாணவ-மாணவிகள் விண்ணப்பிக்கலாம் கலெக்டர் அன்பழகன் தகவல்


பள்ளி-கல்லூரி விடுதிகளில் சேர மாணவ-மாணவிகள் விண்ணப்பிக்கலாம் கலெக்டர் அன்பழகன் தகவல்
x
தினத்தந்தி 6 Jun 2019 4:15 AM IST (Updated: 6 Jun 2019 2:04 AM IST)
t-max-icont-min-icon

கரூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி-கல்லூரி விடுதிகளில் சேர தகுதியுடைய மாணவ-மாணவிகள் விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.

கரூர்,

கரூர் மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மாணவ-மாணவிகளுக்கு என 16 விடுதிகள் செயல்பட்டு வருகின்றன. இதில் பள்ளி விடுதிகள் மாணவர்களுக்கு 7-ம், மாணவிகளுக்கு 5-ம் மற்றும் கல்லூரி விடுதிகள் மாணவர்களுக்கு 2-ம், மாணவிகளுக்கு 2-ம் உள்ளன. பள்ளி விடுதிகளில் 4 முதல் 12-ம் வகுப்பு வரை பயில்கின்ற மாணவ-மாணவிகளும் மற்றும் கல்லூரி விடுதிகளில் பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்பு மற்றும் பாலிடெக்னிக், ஐ.டி.ஐ. படிப்புகளில் பயிலும் மாணவ-மாணவிகள் சேர தகுதியுடையவர்கள் ஆவர். பிற்படுத்தப்பட்டோர் நலம், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலம் மற்றும் சீர்மரபினர் நல விடுதிகளில் அனைத்து வகுப்பை சேர்ந்த மாணவ-மாணவிகளும் குறிப்பிட்ட விகிதாச்சார அடிப்படையில் சேர்த்து கொள்ளப்படுகின்றனர். இந்த விடுதிகளில் மாணவ-மாணவிகளுக்கு உணவு, தங்கும் வசதி இலவசமாக அளிக்கப்படுகிறது. 10-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ-மாணவிகளுக்கு சீருடைகள் வழங்கப்படுகின்றன. 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு பயிலும் மாணவ-மாணவிகளுக்கு சிறப்பு வழிகாட்டுதல் பயிற்சி அளிக்கப்படுகிறது.

இந்த விடுதிகளில் சேருவதற்கு மாணவ-மாணவிகளுடைய பெற்றோர், பாதுகாவலரது ஆண்டு வருமானம் ரூ.1 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். இருப்பிடத்திலிருந்து, பயிலும் கல்வி நிலையத்தின் தொலைவு குறைந்தபட்சம் 8 கிலோ மீட்டருக்கு மேல் இருத்தல் வேண்டும். இந்த தூர விதி மாணவிகளுக்கு பொருந்தாது. தகுதியுடைய மாணவ- மாணவிகள் விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட விடுதி காப்பாளர், காப்பாளினிகளிடமிருந்தோ அல்லது மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்திலிருந்தோ இலவசமாக பெற்று கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் பள்ளி விடுதிகளை பொறுத்தவரையில் சம்பந்தப்பட்ட விடுதி காப்பாளர், காப்பாளினியிடம் அல்லது மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் வருகிற 20-ந்தேதிக்குள்ளும், கல்லூரி விடுதிகளை பொறுத்தவரையில் சம்பந்தப்பட்ட விடுதி காப்பாளர், காப்பாளினியிடம் அல்லது மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் ஜூலை 15-ந் தேதிக்குள்ளும் சமர்ப்பிக்க வேண்டும்.

மாணவ-மாணவிகள் விண்ணப்பிக்கும் போது சாதி, பெற்றோரது ஆண்டு வருமானம் குறித்த சான்றிதழ்கள் அளிக்க தேவையில்லை. விடுதியில் சேரும் போது மட்டும் இந்த சான்றிதழ்களை அளித்தால் போதுமானது. முகாம்வாழ் இலங்கை தமிழர்களின் குழந்தைகளுக்கு என தனியே 5 இடங்கள் ஒதுக்கப்படும். எனவே மாணவ- மாணவிகள் இந்த விடுதி சலுகைகளை பெற்று பயனடையலாம். இவ்வாறு அதில் கூறியுள்ளார். 

Next Story