சாலை விரிவாக்கப்பணியில் முறைகேடு: நடவடிக்கை கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்


சாலை விரிவாக்கப்பணியில் முறைகேடு: நடவடிக்கை கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 5 Jun 2019 11:00 PM GMT (Updated: 5 Jun 2019 8:49 PM GMT)

சாலை விரிவாக்கப்பணியில் முறைகேடு நடந்துள்ளதாகவும், இதுகுறித்து நடவடிக்கை எடுக்கக்கோரியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பொன்மலைப்பட்டி,

திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட எஸ்.ஐ.டி. கல்லூரி முதல் கீழ கல்கண்டார்கோட்டை வரை மாநகராட்சி சார்பில் சாலை விரிவாக்கப் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த பணியில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளதால் தரமற்ற சாலை அமைக்கப்பட்டு வருவதாகவும், சாலையை சிலர் ஆக்கிரமிப்பு செய்திருப்பதாகவும், இதுகுறித்து நடவடிக்கை எடுக்கக்கோரியும், ஏற்கனவே அமைக்கப்பட்ட சாலைகள் குண்டும்-குழியுமாக காட்சி அளிப்பதால் தற்போது அமைக்கப்படும் சாலை விரிவாக்கப்பணியை தரமான முறையில் அமைத்திட வேண்டும். மேல கல்கண்டார் கோட்டை பகுதியில் இருந்து கீழகல்கண்டார் கோட்டை வழியாக கீழக்குறிச்சிக்கு பஸ் சேவையை நீடிக்க கோரியும் நேற்று மேல கல்கண்டார்கோட்டையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியைச் சேர்ந்த மாவட்ட செயலாளர் ராஜா, பகுதி செயலாளர் கார்த்திகேயன், துப்புரவு சங்க மாவட்ட செயலாளர் மாறன், இந்திய மாணவர் சங்க மாவட்ட செயலாளர் மோகன் மற்றும் மாதர் சங்கத்தை சேர்ந்தவர்கள், அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்த போலீஸ் உதவி கமிஷனர் பாலமுருகன் தலைமையிலான போலீசார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். உங்கள் கோரிக்கை குறித்து மாநகராட்சி மற்றும் போக்குவரத்து துறை அதிகாரிகளிடம் தெரியப்படுத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி கூறினர்.

இதனைஏற்று ஆர்ப்பாட்டத்தை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர். சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி தரமான சாலை அமைக்காவிட்டால் அடுத்த கட்ட போராட்டம் நடத்தப்படும் என்று ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்தனர். 

Next Story