மோட்டார் சைக்கிள்– லாரி மோதிய விபத்தில் கணவன் கண் முன் பெண் பரிதாப சாவு
டி.கல்லுப்பட்டியில் மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் கணவன் கண் முன் மனைவி இறந்துபோன சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியது.
பேரையூர்,
பேரையூர் அருகே உள்ள தும்மநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் சுந்தரராஜ் (வயது 45). இவருடைய மனைவி குருவு (35). நேற்று காலை கணவன்–மனைவி 2 பேரும் டி.கல்லுப்பட்டி அருகே காரைகேணியில் உள்ள தங்களது குலதெய்வ கோவிலுக்கு சாமி கும்பிட சென்றனர். பின்னர் அவர்கள் அங்கிருந்து தும்மநாயக்கன்பட்டிக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர்.
டி.கல்லுப்பட்டி பஜார் பகுதியில் உள்ள ராஜபாளையம் சாலையில் அவர்கள் வந்தபோது, பின்னால் மதுரையில் இருந்து ராஜபாளையம் நோக்கி காய்கறிகள் ஏற்றி கொண்டு சென்ற லாரி ஒன்று மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் சென்ற குருவு கீழே விழுந்தார். அந்த சமயம் லாரி அவர் மீது ஏறி இறங்கியது. இதில் உடல் நசுங்கி சம்பவம் இடத்திலேயே குருவு இறந்துபோனார். சுந்தர்ராஜ் பலத்த காயமடைந்து சிகிச்சைக்காக திருமங்கலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளார். குருவுவின் உடலும் அங்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைக்கப்பட்டது.
முன்னதாக விபத்தில் மனைவி கண் முன் முன்பு பலியானதை கண்டு சுந்தர்ராஜ் கதறி அழுதார். இது பரிதாபத்தை ஏற்படுத்தியது. இந்த விபத்து குறித்து டி.கல்லுப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது லாரியை ஓட்டிச் சென்றவர் ராஜபாளையத்தை சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.