அலங்காநல்லூர் விவசாயி கொலையில் மீண்டும் பரபரப்பு: சிறுவர்களையும் கூலிப்படையாக செயல்பட வைத்தது அம்பலம் கைதான 4 பேர் சிறையில் அடைப்பு


அலங்காநல்லூர் விவசாயி கொலையில் மீண்டும் பரபரப்பு: சிறுவர்களையும் கூலிப்படையாக செயல்பட வைத்தது அம்பலம் கைதான 4 பேர் சிறையில் அடைப்பு
x
தினத்தந்தி 6 Jun 2019 5:00 AM IST (Updated: 6 Jun 2019 3:56 AM IST)
t-max-icont-min-icon

அலங்காநல்லூர் விவசாயி கொலையில் ஏற்கனவே அவருடைய 2–வது மனைவி, மகள் கைதான நிலையில், அந்த கொலை தொடர்பாக கூலிப்படையை சேர்ந்த 2 சிறுவர்கள் உள்பட 4 பேர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர். இதுதொடர்பான பரபரப்பு தகவல்களும் தெரியவந்துள்ளன.

அலங்காநல்லூர்,

மதுரை மாவட்டம் அலங்காநல்லூரை சேர்ந்தவர் இளங்கோவன்(வயது 56), விவசாயியான இவர் வட்டிக்கு பணம் கொடுக்கல்–வாங்கல் தொழிலும் செய்து வந்தார். அவரது முதல் மனைவி இறந்துவிட்டார். இதையடுத்து தத்தனேரியை சேர்ந்த அபிராமியுடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. பின்னர் அபிராமியுடன் இளங்கோவன் குடித்தனம் நடத்தி வந்ததாக தெரியவருகிறது.

அபிராமியும் ஏற்கனவே திருமணமானவர். அவருக்கு அனுசுயா (21) என்ற மகள் உள்ளார். இந்த நிலையில் இளங்கோவனுக்கும், அபிராமிக்கும் சொத்து தகராறு ஏற்பட்டது. சில நாட்களுக்கு முன்பு ஒரு கும்பலால் தனது வீட்டில் இளங்கோவன் கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில், அபிராமியும், அவருடைய மகள் அனுசுயாவும் கூலிப்படையை ஏவி இளங்கோவனை கொன்றது தெரியவந்தது. இந்த சம்பவம் மதுரை மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுதொடர்பாக அலங்காநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அபிராமி, அனுசுயா ஆகியோரை கைது செய்தனர். மேலும் கூலிப்படை கும்பலை தேடிவந்தனர்.

அபிராமி கொடுத்த தகவலின் பேரில் மதுரை கோ.புதூரை சேர்ந்த பாலமுருகன் (20), மற்றும் 17 வயதுடைய 2 சிறுவர்கள், சிவகங்கை மாவட்டம் இளையான்குடியை சேர்ந்த வினோத்குமார் (19) என 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

இளங்கோவன் கொலையை 6 பேர் சேர்ந்து அரங்கேற்றி இருக்கிறார்கள். அதில் தற்போது கைதான 4 பேர் கிட்டத்தட்ட 20 வயதுக்கு குறைவானவர்களாக இருப்பது போலீசாருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சிறுவர்களும் கூலிப்படையாக மாறியது எப்படி? இவர்களுக்கும் அபிராமி, அனுசுயாவுக்கு தொடர்பு ஏற்பட்டது எப்படி? பண ஆசை காட்டி மூளைச்சலவை செய்து சிறுவர்களை கொலை செய்யச் செய்யும் அளவுக்கு மாற்றியது யார்? என்பது தொடர்பான கேள்விகள் போலீசாரின் விசாரணை வளையத்தை விரிவடையச் செய்துள்ளன. கைதான 4 பேரையும் போலீசார் வாடிப்பட்டி கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

மேலும் இந்த கொலையில் தேடப்பட்டு வந்த கோ.புதூரை சேர்ந்த மகேஷ்பாபு (22) என்பவர் நேற்று முன்தினம் மதுரை மாவட்ட கோர்ட்டில் ஏற்கனவே சரண் அடைந்தார். இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட தினேஷ் மட்டும் தலைமறைவாக உள்ளார். அவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். அவர்தான் இந்த கும்பலுக்கு தலைவனாக செயல்பட்டாரா? என்றும் சந்தேகிக்கப்படுகிறது. அவரையும் விரைவில் பிடித்துவிடுவோம் என்று போலீசார் தெரிவித்தனர். எனவே இளங்கோவன் கொலையில் புதைந்துள்ள மர்ம முடிச்சுகள் இன்னும் ஓரிரு நாளில் அவிழும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Next Story