கோட்டக்குப்பம் அருகே ஆட்டோ –லாரி மோதல்; மீனவ பெண்கள் 2 பேர் பலி


கோட்டக்குப்பம் அருகே ஆட்டோ –லாரி மோதல்; மீனவ பெண்கள் 2 பேர் பலி
x
தினத்தந்தி 6 Jun 2019 4:11 AM IST (Updated: 6 Jun 2019 4:11 AM IST)
t-max-icont-min-icon

கோட்டக்குப்பம் அருகே ஆட்டோ மீது லாரி மோதிய விபத்தில் மீனவ பெண்கள் 2 பேர் பலியானார்கள். 6 பேர் படுகாயமடைந்தனர்.

வானூர்,

விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம் அருகே சின்ன முதலியார்சாவடி மற்றும் பெரிய முதலியார் சாவடியை சேர்ந்த மீனவ பெண்கள் தினமும் புதுவை பெரியகடை மீன் மார்க்கெட்டில் இருந்து மொத்தமாக மீன் வாங்கி, கிராமப்புறங்களில் விற்பனை செய்து வருகின்றனர்.

நேற்று அதிகாலை 4.30 மணியளவில் வழக்கம்போல் சின்ன முதலியார்சாவடியை சேர்ந்த கஜேந்திரன் மனைவி நாவம்மாள் (வயது 45), சுப்பிரமணி மனைவி முத்துலட்சுமி (42), கண்ணகி (36), குமாரி (42), கலா (50), ஏளாயி (50), சித்ரா (45), அஞ்சலாட்சி (45) ஆகியோர் மீன் வாங்க ஆட்டோவில் புதுவைக்கு புறப்பட்டு சென்றனர்.

ஆட்டோவை பெரிய முதலியார்சாவடியை சேர்ந்த டிரைவர் ராஜி (36) ஓட்டினார். புறப்பட்ட சிறிது நேரத்தில் புதுச்சேரி – சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் வந்தபோது, சென்னையில் இருந்து புதுவை நோக்கி சரக்கு ஏற்றிவந்த டாரஸ் லாரி ஆட்டோ மீது மோதியது. இதில் ஆட்டோ அப்பளம்போல் நொறுங்கியது. ஆட்டோவில் பயணம் செய்த நாவம்மாள், முத்துலட்சுமி உள்பட 8 மீனவ பெண்களும், டிரைவர் ராஜியும் படுகாயமடைந்தனர்.

இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் விபத்தில் காயமடைந்த அனைவரையும் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரி மற்றும் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் நாவம்மாள், முத்துலட்சுமி இருவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். மற்றவர்கள் சிகிச்சைப்பெற்று வருகின்றனர்.

விபத்து குறித்து கோட்டக்குப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தப்பியோடிய டாரஸ் லாரி டிரைவரை வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story