முளகுமூடு பகுதியில் செயல்படும் டாஸ்மாக் கடையை உடனே அகற்ற வேண்டும் கலெக்டர் அலுவலகத்தில் கிராம மக்கள் மனு


முளகுமூடு பகுதியில் செயல்படும் டாஸ்மாக் கடையை உடனே அகற்ற வேண்டும் கலெக்டர் அலுவலகத்தில் கிராம மக்கள் மனு
x
தினத்தந்தி 6 Jun 2019 11:00 PM GMT (Updated: 6 Jun 2019 2:39 PM GMT)

முளகுமூடு பகுதியில் செயல்படும் டாஸ்மாக் கடையை உடனே அகற்றக்கோரி கலெக்டர் அலுவலகத்தில் கிராம மக்கள் திரண்டு வந்து மனு கொடுத்தனர்.

நாகர்கோவில்,

முளகுமூடு பேரூராட்சிக்கு உட்பட்ட கூட்டமாவு, குழிக்கோடு, சடையங்கால் மற்றும் முளகுமூடு பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள், அகில இந்திய கிறிஸ்தவ முன்னேற்ற சேனை குமரி மேற்கு மாவட்ட செயலாளர் அஜித், தி.மு.க. முளகுமூடு பேரூர் செயலாளர் எட்வின் உள்ளிட்டோர் குமரி கிழக்கு மாவட்ட தி.மு.க. துணை செயலாளர் ஜெயராணி தலைமையில் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:–

முளகுமூடு பேரூராட்சி பகுதியை ஒட்டி கூட்டமாவு, குழிக்கோடு, பெரம்பி, சடையங்கால், மருதூர்குறிச்சி உள்பட பல்வேறு ஊர்கள் உள்ளன. இந்த பகுதிகளில் ஆயிரக்கணக்கான வீடுகள் உள்ளன. குழிக்கோடு மற்றும் கூட்டமாவில் தனியார் மற்றும் அரசு பள்ளிகள் உள்ளன. கூட்டமாவுக்கும் குழிக்கோட்டுக்கும் இடைப்பட்ட பகுதியில் ஆள்காட்டி குளம் உள்ளது. இந்த குளத்தையொட்டி செல்லும் சாலை வழியாக பெண்கள் தங்களது குழந்தைகளை பள்ளிக்கு அழைத்துச் சென்று வருவது வழக்கம்.

இந்தநிலையில் ஆள்காட்டி குளத்தின் அருகே கடந்த 3–ந் தேதி முதல் திடீரென புதிதாக டாஸ்மாக் கடை அமைக்கப்பட்டுள்ளது. இந்த மதுக்கடையின் முன்புறம் இந்து கோவில், கிராம நிர்வாக அலுவலகம், தபால் அலுவலகம், ரே‌ஷன் கடை ஆகியவை அமைந்துள்ளன. தற்போது, அங்கு புதிதாக திறக்கப்பட்ட டாஸ்மாக் கடையால் பெண்கள், பள்ளி செல்லும் மாணவிகள் அப்பகுதியில் செல்ல அச்சப்படுகிறார்கள்.

புதிய டாஸ்மாக் மதுக்கடை திறக்கப்பட்ட தகவலை அறிந்த நாங்கள் கடை முன் திரண்டு போராட்டம் நடத்தியதால் கடை அடைக்கப்பட்டது. பெண்கள் மற்றும் குழந்தைகள் அதிகமாக நடமாடும் பகுதியில் திடீரென உருவெடுத்த இந்த டாஸ்மாக் கடையை அங்கிருந்து அகற்றக்கோரி கூட்டமாவு, குழிக்கோடு, சடையங்கால், முளகுமூடு பகுதிகளின் பொதுமக்கள் சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story