எங்களுக்குள் நல்ல புரிதல் உள்ளது: உள்ளாட்சி தேர்தலிலும் தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி தொடரும் கே.எஸ்.அழகிரி பேட்டி


எங்களுக்குள் நல்ல புரிதல் உள்ளது: உள்ளாட்சி தேர்தலிலும் தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி தொடரும் கே.எஸ்.அழகிரி பேட்டி
x
தினத்தந்தி 7 Jun 2019 4:45 AM IST (Updated: 7 Jun 2019 12:34 AM IST)
t-max-icont-min-icon

எங்களுக்குள் நல்ல புரிதல் உள்ளதால், வருகிற உள்ளாட்சி தேர்தலிலும் தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி தொடரும் என்று கே.எஸ்.அழகிரி தெரிவித்தார்.

திருச்சி,

தமிழகத்தை பொறுத்தவரை மும்மொழிக் கொள்கை என்பது ஏற்புடையது அல்ல. அதேவேளையில் நாங்கள் எந்த மொழிக்கும் எதிரானவர்களும் அல்ல. முதலில் இந்தி மொழி கட்டாயம் என்று கூறப்பட்டது. பின்னர் அதில் திருத்தம் செய்து விரும்பிய மொழியை படிக்கலாம் என்பதும் ஒரு திணிப்புதான்.

ஏற்கனவே, தமிழக மாணவர்கள் 2 மொழிகளை கற்கவே சிரமப்பட்டு வருகிறார்கள். 3-வது ஒரு மொழியை கற்க வேண்டும் என்றால் கூடுதல் சுமைதானே. தமிழ்நாட்டில் இந்தி பிரசார சபா மூலம் 7 லட்சம் பேர் படித்து வருகிறார்கள். அது தவறல்ல. ஆனால், பள்ளிகளில் புகுத்த வேண்டாம்.

‘நீட்’ தேர்வில் தமிழக மாணவர்கள் 46 சதவீதம் பேர் வெற்றி பெற்றுள்ளனர். 54 சதவீதம் பேர் தோல்வி அடைந்து விட்டனர். தமிழக அரசு 2 ஆண்டுகாலம் ‘நீட்’ தேர்வை நிறுத்தி வையுங்கள். எங்கள் பாடத்திட்டத்தை முழுமையாக மாற்றிக்கொண்டு ‘நீட்’ தேர்வுக்கு தயாராகி வந்ததும் வையுங்கள் என மத்திய அரசை வலியுறுத்த வேண்டும். நாங்கள் ‘நீட்’ தேர்வு வேண்டாம் என சொல்லவில்லை. கால அவகாசம் வேண்டும் என்று சொல்கிறோம். அரசு பள்ளியில் படிக்கும் மாணவரும் ‘நீட்’ தேர்வில் வெற்றி பெற வேண்டும். அதே வேளையில் ‘நீட்’ தேர்வை விரும்பாத மாநிலத்தில் அது தேவையில்லை என்பதும் காங்கிரசின் கருத்து.

ஹைட்ரோ கார்பன் திட்டத்தில் பாதிப்பு உள்ளதா? என அரசியல்வாதிகள் கருத்து கூறக்கூடாது. விஞ்ஞானிகள்தான் பதில் அளிக்க வேண்டும். ஏனென்றால், அவர்களுக்குத்தான் அதுகுறித்து முழுமையாக தெரியும். கூடங்குளத்தில் அணு உலை அமைத்த வேளையில் ஆபத்தானது என அரசியல்வாதிகள் கூறி வந்தனர். ஆனால், உலகில் உள்ள பாதுகாப்பான அணு உலைகளில் கூடங்குளமும் ஒன்று என அப்போது விஞ்ஞானி அப்துல்கலாம் தெரிவித்தார். அதை நான் நம்பினேன்.

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலில் அதிக கவனம் செலுத்த காங்கிரஸ் கட்சி முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக மாவட்ட தலைவர்களுடன் கலந்தாலோசித்து வருகிறேன். தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி கொள்கை ரீதியிலானது. ஏனென்றால், எங்களுக்குள் ஒரு புரிதல் உள்ளது. வருகிற உள்ளாட்சி தேர்தலிலும் எங்கள் கூட்டணி தொடரும். ஒதுக்கீடு செய்வதில் பிரச்சினை ஏற்பட்டால் அதை பேசி தீர்த்து கொள்வோம்.

நாங்குனேரி சட்டமன்ற தொகுதி காலியாக உள்ளது. ஏற்கனவே, அது காங்கிரஸ் போட்டியிட்ட தொகுதி. அங்கு யார் போட்டியிடுவது என இன்னமும் முடிவு செய்யப்படவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story