துறைத்தேர்வை புதுக்கோட்டை மாவட்டத்தில் 2,974 அரசு பணியாளர்கள் எழுதுகின்றனர் கலெக்டர் தகவல்


துறைத்தேர்வை புதுக்கோட்டை மாவட்டத்தில் 2,974 அரசு பணியாளர்கள் எழுதுகின்றனர் கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 7 Jun 2019 4:30 AM IST (Updated: 7 Jun 2019 1:34 AM IST)
t-max-icont-min-icon

துறைத்தேர்வை புதுக்கோட்டை மாவட்டத்தில் 2 ஆயிரத்து 974 அரசு பணியாளர்கள் எழுத உள்ளனர் என்று கலெக்டர் உமா மகேஸ்வரி தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டை,

புதுக்கோட்டை மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் நடைபெற உள்ள துறைத்தேர்வுகளுக்கான முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம், புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் உமா மகேஸ்வரி தலைமை தாங்கி பேசினார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் அரசு அலுவலகங்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கான துறைத்தேர்வுகள் நாளை (சனிக்கிழமை) முதல் 15-ந் தேதி வரை நடைபெற உள்ளது. அந்த வகையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் நடைபெற உள்ள துறைத் தேர்வை எழுத மொத்தம் 2 ஆயிரத்து 974 அரசு பணியாளர்கள் விண்ணப்பித்து உள்ளனர். அவர்கள் தேர்வு எழுதுவார்கள்.

மேலும், துறைத்தேர்வை சிறந்த முறையில் நடத்தும் வகையில் தேர்வு முதன்மை கண்காணிப்பாளர்கள் 10 பேர், தேர்வு எழுதும் பணியாளர்களுக்கு ஒரு தேர்வு கண்காணிப்பாளரை நியமிக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது. வினாத்தாள்களை கருவூலத்தில் இருந்து தேர்வு மையத்திற்கு எடுத்து வரவும், தேர்வு முடிந்த பின் விடைத்தாள்களை சார்நிலை கருவூலத்திற்கு பாதுகாப்பாக போலீசாருடன் கொண்டு செல்லவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

தேர்வு நடைபெறும் இடங்களில் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய போலீசாருக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. தேர்வறைகளில் முறைகேடுகளை தடுக்கும் வகையில் நியமிக்கப்பட்டு உள்ள கண்காணிப்பு குழுவினர் தேர்வு மையங்களில் தொடர் சோதனைகள் நடத்த அறிவுறுத்தப்பட்டு உள்ளது. மேலும், தேர்வு மையங்களில், குடிநீர் வசதி, மின்சார வசதி, கழிப்பிட வசதி உள்ளிட்ட தேவையான அடிப்படை வசதிகளை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அதிகாரி சாந்தி, புதுக்கோட்டை நகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் உள்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Next Story