மாவட்ட செய்திகள்

நாகர்கோவிலில் பரபரப்பு வாலிபரை கொன்று சுடுகாட்டில் உடல் எரிப்பு காதல் விவகாரமா? போலீஸ் விசாரணை + "||" + Young people in Nagercoil Body burning love Police investigation

நாகர்கோவிலில் பரபரப்பு வாலிபரை கொன்று சுடுகாட்டில் உடல் எரிப்பு காதல் விவகாரமா? போலீஸ் விசாரணை

நாகர்கோவிலில் பரபரப்பு வாலிபரை கொன்று சுடுகாட்டில் உடல் எரிப்பு காதல் விவகாரமா? போலீஸ் விசாரணை
நாகர்கோவிலில் வாலிபரை கொன்று உடல் சுடுகாட்டில் எரிக்கப்பட்டது. காதல் விவகாரத்தில் இந்த கொலை நடந்ததா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாகர்கோவில்,

நாகர்கோவிலை அடுத்த கரியமாணிக்கபுரம் பகுதியில் பழையாறு ஓடுகிறது. இந்த ஆற்றையொட்டி சுடுகாடு ஒன்று உள்ளது. அங்குள்ள தகனமேடையின் குழியில் நேற்று காலை ஆண் பிணம் ஒன்று பாதி எரிந்த நிலையில் கிடந்தது.


இதைப்பார்த்த அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். நாகர்கோவில் போலீஸ் உதவி சூப்பிரண்டு ஜவகர், கோட்டார் இன்ஸ்பெக்டர் அன்புபிரகாஷ் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.

அங்கு 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் கொலை செய்யப்பட்டு தகன மேடையின் குழியில் உடல் எரிக்கப்பட்டு இருந்தது. அதுவும் முழுமையாக எரியவில்லை. காது பகுதி முழுவதும் எரிந்த நிலையிலும், மற்ற பகுதிகளில் ஆங்காங்கே மட்டும் எரிந்த நிலையிலும் இருந்தன. வலது கழுத்து, வலது கன்னம், முதுகு ஆகிய பகுதிகளில் தலா 4 கத்திக்குத்து காயங்களும் இருந்தன. அந்த பிணத்தை பெட்ரோல் ஊற்றி எரித்துள்ளனர். பெட்ரோல் கொண்டு வருவதற்கு பயன்படுத்தப்பட்ட பிளாஸ்டிக் பாட்டில் ஒன்றும் அருகில் கிடந்தது.

கொலை செய்யப்பட்ட வாலிபர் டிப்-டாப் உடை அணிந்திருக்கலாம் என தெரிகிறது. அவரது காலில் ஷூ அணிந்ததற்கான அடையாளமாக இரண்டு கால்களிலும் ‘சாக்ஸ்’ அணிந்துள்ளார். ஆனால் ஷூக்களை காணவில்லை. அவை கொலை செய்யப்பட்ட இடத்தில் விழுந்திருக்கலாம் என தெரிகிறது. சம்பவ இடத்துக்கு போலீஸ் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு துப்பு துலக்கப்பட்டது.

இதையடுத்து போலீசார் கருகிய நிலையில் கிடந்த உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வடிவீஸ்வரம் கிழக்கு கிராம நிர்வாக அலுவலர் இசக்கியம்மாள் கொடுத்த புகாரின்பேரில் கோட்டார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். கொலையான வாலிபர் உடல் எரிக்கப்பட்டு கிடந்த பகுதி கோட்டார் மற்றும் சுசீந்திரம் 2 போலீஸ் நிலையங்களின் எல்லைப் பகுதியாகும். எனவே கொலையானவர் சுசீந்திரம் பகுதியைச் சேர்ந்தவராகவும் இருக்கலாம் என்ற சந்தேகம் போலீசாருக்கு ஏற்பட்டுள்ளது.

எனவே சுசீந்திரம் மற்றும் கோட்டார் போலீஸ் நிலைய பகுதிகளில் காணாமல் போனவர்கள் விவரங்களை போலீசார் சேகரித்து வருகிறார்கள். இதுதவிர மாவட்டம் முழுவதும் உள்ள போலீஸ் நிலையங்களுக்கும் தகவல் கொடுத்து, 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் யாராவது காணாமல் போய் உள்ளார்களா? என்ற விவரங்களையும் சேகரித்து வருகிறார்கள்.

பிணமாக கிடந்த வாலிபர் டிப்-டாப் உடை அணிந்திருப்பதால் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரியக்கூடியவரா? என்பது குறித்தும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். அவரை கொடூரமான முறையில் கத்தியால் குத்தி பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை செய்திருப்பதால் இவர் காதல் விவகாரத்தில் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். இருந்தாலும் கள்ளக்காதல், தொழில் போட்டி உள்ளிட்ட வேறு ஏதாவது கொலைக்கு காரணமாக இருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது. முதலில் கொலை செய்யப்பட்டவர் யார்? என்பது தெரிந்தால்தான் அடுத்த கட்ட விசாரணைக்கு செல்ல முடியும் என்பதால் கொலையானவரை அடையாளம் காண்பதில் போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.

இந்த சம்பவத்தில் துப்பு துலக்குவதற்கு நாகர்கோவில் போலீஸ் உதவி சூப்பிரண்டு ஜவகர் தலைமையிலும், கோட்டார் இன்ஸ்பெக்டர் அன்புபிரகாஷ் தலைமையிலும் தலா ஒரு தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. தனிப்படை போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர். இந்த கொலை சம்பவம் நேற்று நாகர்கோவில் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.