காரிமங்கலம் பகுதியில் வீடு, கோவில்களில் நகை, பணம் திருடியவர் கைது 30 பவுன், லாரி மீட்பு


காரிமங்கலம் பகுதியில் வீடு, கோவில்களில் நகை, பணம் திருடியவர் கைது 30 பவுன், லாரி மீட்பு
x
தினத்தந்தி 7 Jun 2019 3:45 AM IST (Updated: 7 Jun 2019 2:29 AM IST)
t-max-icont-min-icon

காரிமங்கலம் பகுதியில் வீடு, கோவில்களில் நகை, பணம் திருடியவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 30 பவுன் நகை மற்றும் லாரி மீட்கப்பட்டது.

காரிமங்கலம்,

தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் அடிலம் பகுதியில் உள்ள சக்தி மாரியம்மன் கோவில், ஏ.சப்பாணிப்பட்டி நஞ்சுண்டேஸ்வரர் கோவில், பழையூரில் உள்ள மாரியம்மன் ஆகிய 3 கோவில்களில் கடந்த மாதம் மர்ம ஆசாமிகள் பூட்டை உடைத்து 3¼ பவுன் நகை, உண்டியல் பணத்தை திருடிச்சென்றதாக கொடுக்கப்பட்ட புகாரின்பேரில் காரிமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

இதேபோல கெஜ்ஜல்நாயக்கன் அள்ளியை சேர்ந்த ராணுவவீரர் ஆனந்தன் என்பவரது வீட்டில் 15 பவுன் நகை, ரொக்கம் ரூ.2 லட்சம், அதேபோல கெரகோடஅள்ளியில் சித்ரா என்பவரது வீட்டில் 5 பவுன் நகை, ரொக்கம் ரூ.45 ஆயிரம் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடிச்சென்றதாக கொடுக்கப்பட்ட புகாரின்பேரிலும் காரிமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சதீஸ்குமார் மற்றும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை காரிமங்கலம் போலீசார் மொரப்பூர் சாலையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்குள்ள ஒரு டீக்கடையில் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் நின்றிருந்த ஒருவரை பிடித்து விசாரணை நடத்தினர்.

இதில் அவர் கிரு‌‌ஷ்ணகிரி மாவட்டம் வரட்டணப்பள்ளியை சேர்ந்த சுந்தரவேல் (வயது 40) என்பதும், கடந்த 2 ஆண்டுகளாக அவர் காவேரிப்பட்டணம் வட்டார வளர்ச்சி அலுவலர் அலுவலகத்துக்கு பின்புறம் உள்ள எம்.ஜி.ஆர். நகரில் வாடகை வீட்டில் இருந்து வந்ததும், காரிமங்கலம் பகுதியில் வீடு, கோவில்களில் நகை, பணத்தை திருடியவர் என்பதும் தெரியவந்தது.

இதையடுத்து அவர் மீது வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்த போலீசார், அவர் கொடுத்த தகவலின்பேரில் 30 பவுன் நகை மற்றும் ரூ.2 லட்சத்து 80 ஆயிரம் மதிப்பிலான ஒரு லாரி ஆகியவற்றை மீட்டனர்.பின்னர் அவரை பாலக்கோடு குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, கோர்ட்டு உத்தரவுப்படி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். இந்த திருட்டு வழக்கில் வேறு யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது என விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Next Story