மோட்டார் சைக்கிள் மோதி விபத்து: 2 பேர் பரிதாப சாவு
கொள்ளிடம் அருகே மோட்டார் சைக்கிள் மோதி ஏற்பட்ட விபத்தில் 2 பேர் பரிதாபமாக இறந்தனர்.
கொள்ளிடம்,
கொள்ளிடம் அருகே பழையபாளையம் சன்னதி தெருவை சேர்ந்த அறிவழகன் மகன் மார்க்கோனி (வயது 28). இவரது நண்பர்கள், அதே பகுதியை சேர்ந்த காமராஜ் மகன் ராஜபாண்டி (22), கருணாநிதி மகன் அஜீத்குமார் (23). இவர்கள் 3 பேரும் கூலித்தொழிலாளிகள்.
நேற்று 3 பேரும் ஒரு மோட்டார் சைக்கிளில் வேலைக்கு செல்வதற்காக பழையாறு கிராமம் நோக்கி சென்று கொண்டிருந்தனர். மோட்டார் சைக்கிளை மார்க்கோனி ஓட்டினார். கொள்ளிடம் அருகே தற்காஸ் என்ற இடத்தில் சென்றபோது சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த அதே பகுதியை சேர்ந்த சக்கரபாணி (40) என்பவர் மீது திடீரென மோட்டார் சைக்கிள் மோதியது.
இதில் தூக்கி வீசப்பட்டு கீழே விழுந்த சக்கரபாணி படுகாயமடைந்தார். அப்போது கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் சாலையில் விழுந்தது. இதில் படுகாயம் அடைந்த மார்க்கோனி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். மேலும், விபத்தில் படுகாயம் அடைந்த சக்கரபாணி, ராஜபாண்டி, அஜீத்குமார் ஆகிய 3 பேரும் சிகிச்சைக்காக சிதம்பரம் ராஜாமுத்தையா அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். ஆனால், மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே சக்கரபாணி பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த புதுப்பட்டினம் போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மார்க்கோனி, சக்கரபாணி ஆகிய 2 பேரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சீர்காழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து கொள்ளிடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.