வனத்துறையில் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேட்டி


வனத்துறையில் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேட்டி
x
தினத்தந்தி 9 Jun 2019 4:30 AM IST (Updated: 9 Jun 2019 1:39 AM IST)
t-max-icont-min-icon

வனத்துறையில் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும் என அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்தார்.

திருச்சி,

வனத்துறையில் தமிழ்நாடு வனத்தோட்ட கழகம் என்கிற ‘டேப்கான்’ என்கிற துறை தனியாக பல ஆண்டுகளாக இயங்கி வருகிறது. வருகிற சட்டமன்றக்கூட்டத்துக்கு முன்பாக இதில் ஆய்வுக்கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. வனத்துறையில் வனத்தோட்ட கழகம் ரூ.100 கோடி வருமானம் ஈட்டியுள்ளது. 201819ம் இதற்கு ரூ.27.83 கோடி லாபம் வந்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வனத்துறைக்கு மட்டும் குத்தகையாக ரூ.28.27 கோடியை வனத்தோட்ட கழகம் கொடுத்துள்ளது. குறைந்த அளவு வைப்பு நிதி ரூ.60.46 கோடியில் இருந்து ரூ.93.79 கோடியாக வனத்தோட்ட கழகம் ஈட்டியுள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு ஈவுத்தொகை ரூ.8.356 கோடியை அரசுக்குக் கொடுத்துள்ளது. இது முதல் முறையாகும்.

வண்ணத்துப்பூச்சி பூங்கா

பெரம்பலூர், விருத்தாச் சலம், புதுக்கோட்டை, தஞ்சாவூர் உள்பட பல பகுதிகளில் வனத்தோட்ட கழகம் செயல்பட்டு உற்பத்தியைப் பெருக்கிக் கொண்டிருக்கிறது. வனத்துறையில் 1,172 பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பம் வினியோகிக்கப்பட்டு ஆட்கள் நியமிக்கப்பட்டனர். மீதம் உள்ள காலிப்பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும்.

திருச்சி அருகே சிறுகனூரில் அமைக்கப்பட்டு வரும் வன உயிரியல் பூங்கா முழுமையானதும் திறப்பு விழா நடத்தப்படும். ஸ்ரீரங்கம் வண்ணத்துப்பூச்சி பூங்காவிற்கு தேவையான அடிப்படை வசதிகள் மற்றும் நிதி உதவிகள் செய்யப்படும். வனப்பகுதியில் வன விலங்களுக்கு தொட்டி கட்டப்பட்டு சூரியஒளி மின்சக்தி மூலம் மோட்டார்களை இயக்கி, குடிநீர் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

பழங்குடியினருக்கு பட்டா

மேலும் பழங்குடியினருக்கு பட்டா வழங்கப்பட்டு வருகிறது. பழங்குடியினருக்கு அதிக நன்மை செய்வதில் தமிழகம் முதல் இடத்தில் உள்ளது. மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில் பசுமை நல்ல முறையில் உள்ளது. இந்தியாவில் வனப்பகுதி 33.33 சதவீதமும், தமிழகத்தில் 18.6 சதவீதம் உள்ளது.

தற்போது வனப்பகுதியை அதிகரிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கடந்த 2017ம் ஆண்டு கணக்கெடுப்பின் படி தமிழகத்தில் 229 புலிகள் உள்ளது. புலிகள் எண்ணிக்கை அதிகரித்தால் தான் வனப்பகுதியின் எல்லையும் விரிவடையும்.

இவ்வாறு அவர் கூறினார்.

ராஜன் செல்லப்பாவின் கருத்து...

அ.தி.மு.க.வின் தலைமை குறித்து மதுரை ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. தெரிவித்த கருத்துகள் தொடர்பாக அவரிடம் நிருபர்கள் கேட்ட போது, அரசியல் தொடர்பான கேள்விகளுக்கு அவர் பதில் அளிக்கவில்லை. முன்னதாக திருச்சி கம்பரசம்பேட்டையில் உள்ள தமிழ்நாடு வனத்தோட்ட கழகத்தில் திண்டுக்கல் சீனிவாசன் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அதன் தலைவர் உபாத்யா, மேலாண் இயக்குனர் கிரிதரன் உள்பட வனத்துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.

Next Story