தனுஷ்கோடியில் கடல் கொந்தளிப்பு; ராமேசுவரத்தில் கடல் உள் வாங்கியது, பலத்தகாற்றால் ரெயில்கள் தாமதம்
ராமேசுவரத்தில் கடல் உள் வாங்கியது.தனுஷ்கோடியில் கடல் கொந்தளிப்புடன், பலத்த காற்றால் சாலைகளை மணல் மூடியது.ரெயில்கள் தாமதமாக சென்றன.
ராமேசுவரம்,
ராமேசுவரம் பகுதியில் வழக்கத்திற்கு மறாக கடந்த சில நாட்களாக பலத்த காற்று வீசி வருகிறது.இந்நிலையில் ராமேசுவரம் துறைமுக கடல் பகுதியில் நேற்று காலை முதலே பல அடி தூரம் கடல் உள்வாங்கி காணப்பட்டது.இதனால் கடற்கரை பகுதியானது பெரிய மைதானம் போல் மணல் பரப்பாக காட்சியளித்தது. கடல் உள்வாங்கி காணப்பட்டதால் மீன்பிடி படகுகளும் தரை தட்டிய நிலையில் கிடந்தன. உள்வாங்கி காணப்பட்ட பகுதியில் நேற்று பகல் 3 மணிக்கு மேல் மீண்டும் கடல் நீர் ஏறிய நிலையில் சகஜ நிலைக்கு திரும்பியது.
தனுஷ்கோடி பகுதியில் தொடர்ந்து வீசி வரும் பலத்த சூறாவளி காற்றால் எம்.ஆர்.சத்திரம்–கம்பிபாடு இடையே பல இடங்களில் சாலைகளை மணல் மூடியுள்ளது.மேலும் எம்.ஆர்.சத்திரம் கடற்கரையில் உள்ள மீன்பிடி துறைமுகத்தை தாண்டி கடல் அலைகள்
பல அடி உயரத்திற்கு ஆக்ரோஷமாக மேல் நோக்கி சீறி எழுந்தன.
பலத்த சூறாவளி காற்றால் தனுஷ்கோடி சாலை முழுவதும் மணலானது புழுதியாக பறப்பதால் இரு சக்கர வாகனம் மற்றும் ஆட்டோவில் சென்ற சுற்றுலா பயணிகளும் மிகுந்த சிரமம் அடைந்தனர்.
பாம்பன் பகுதியில் பலத்த சூறாவளி காற்று வீசியதால் காற்றின் வேகத்துக்கு ஏற்ப செயல்படும் தானியங்கி சிக்னலில் சிக்னல் கிடைக்கவில்லை. இதனால் ராமேசுவரத்தில் இருந்து நேற்று மாலை 5 மணிக்கு புறப்பட்ட எக்ஸ்பிரஸ் ரெயில் அக்காள்மடத்தில் இரவு 7 மணி வரையிலும் நிறுத்தி வைக்கப் பட்டிருந்தது.மாலை 6 மணிக்கு மதுரைக்கு புறப்பட வேண்டிய பயணிகள் ரெயிலும் 7 மணி வரை ராமேசுவரம் ரெயில் நிலையத்திலேயே நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. காற்றின் வேகம் குறைந்தபின்னர் தாமதமாக ரெயில்கள் புறப்பட்டு சென்றன.