கனிமொழி எம்.பி.யிடம் புத்தகம் எழுதுமாறு அறிவுரை; பிரபல எழுத்தாளர் கி.ராஜநாராயணன் விருப்பம் தெரிவித்தார்
தன்னை சந்தித்த கனிமொழி எம்.பி.யிடம் புத்தகம் எழுதுமாறு எழுத்தாளர் கி.ராஜநாராயணன் விருப்பம் தெரிவித்தார்.
புதுச்சேரி,
புதுச்சேரிக்கு தனது கணவர் அரவிந்தனுடன் கனிமொழி எம்.பி. வந்தார். காலாப்பட்டு பிம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முன்னாள் முதல் அமைச்சர் ஜானகிராமனை சந்தித்து உடல்நலம் குறித்து கேட்டறிந்தார். பின்னர் லாஸ்பேட்டை அரசு குடியிருப்புக்கு சென்றார். அங்கு வசித்து வரும் சாகித்ய அகாடமி விருது பெற்ற பிரபல எழுத்தாளர் கி.ராஜநாராயணனை சந்தித்தார். வயது முதிர்வால் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ள அவரிடமும் கனிமொழி நலம் விசாரித்தார்.
அப்போது கி.ராஜநாராயணன் கொடுத்த புகைப்பட ஆல்பத்தை கனிமொழி ஆர்வத்துடன் வாங்கிப் பார்த்தார். அதில் இருந்து சில அரிய படங்களை தனது செல்போனில் படம் எடுத்துக் கொண்டார்.
விளாத்திகுளம் சுவாமிகள், கிட்டப்பா, இந்த இவள் ஆகிய 3 புத்தகங்களை கனிமொழி எம்.பி.க்கு கி.ராஜநாராயணன் வழங்கினார். தன்னுடன் எடுத்து வந்து இருந்த நாட்டுப்புற கலைக்களஞ்சியம், கி.ராஜநாராயணன் கட்டுரைகள் ஆகிய நூல்களில் ராஜநாராயணனிடம் கனிமொழி கையெழுத்து வாங்கினார்.
புதிதாக புத்தகம் எதுவும் எழுதுகிறீர்களா? என கேட்ட ராஜநாராயணனிடம், தீவிர அரசியலுக்கு வந்த பிறகு நேரம் கிடைக்காமல் போனது. புத்தகம் எதுவும் எழுதவில்லை என கனிமொழி தெரிவித்தார். நீண்ட தொகுப்பாக எழுத முடியாவிட்டால் டைரி குறிப்புபோல் சிறியதாக புத்தகம் எழுதலாமே என கி.ராஜநாராயணன் அறிவுரை வழங்கினார். அதை அவரும் ஆமோதித்தார். பின்னர் அங்கிருந்து கணவருடன் கனிமொழி புறப்பட்டு சென்றார். இந்த நிகழ்ச்சியின் போது மாநில (தெற்கு) தி.மு.க. அமைப்பாளர் சிவா எம்.எல்.ஏ. மற்றும் நிர்வாகிகள் உடன் சென்றனர்.