ராஜன் செல்லப்பாவை தொடர்ந்து அ.தி.மு.க. இரட்டை தலைமைக்கு குன்னம் எம்.எல்.ஏ.வும் எதிர்ப்பு ஓ.பி.எஸ். மீது கடும் தாக்கு


ராஜன் செல்லப்பாவை தொடர்ந்து அ.தி.மு.க. இரட்டை தலைமைக்கு குன்னம் எம்.எல்.ஏ.வும் எதிர்ப்பு ஓ.பி.எஸ். மீது கடும் தாக்கு
x
தினத்தந்தி 10 Jun 2019 4:45 AM IST (Updated: 10 Jun 2019 12:58 AM IST)
t-max-icont-min-icon

ராஜன் செல்லப்பாவை தொடர்ந்து குன்னம் எம்.எல்.ஏ. ராமச்சந்திரனும் அ.தி.மு.க. இரட்டை தலைமைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

பெரம்பலூர்,

எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் முழுமையாக இணையவில்லை. அ.தி.மு.க.வுக்கு அதிகாரமிக்க ஒற்றை தலைமை வேண்டும் என்று மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், மதுரை வடக்கு தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வுமான ராஜன் செல்லப்பா நேற்று முன்தினம் நிருபர்களுக்கு பரபரப்பு பேட்டியளித்தார். இந்நிலையில் பெரம்பலூர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், குன்னம் தொகுதி எம்.எல்.ஏ.வுமான ஆர்.டி.ராமச்சந்திரன் அந்த கருத்துக்கு ஆதரவு தெரிவித்து பேசி ஒரு வீடியோவை வாட்ஸ்-அப்பில் அனுப்பியுள்ளார். அது தற்போது வைரலாகி வருகிறது. உடல்நலக்குறைவால் தற்போது கேரளா மாநிலத்தில் சிகிச்சை பெற்று வரும் ராமச்சந்திரன் எம்.எல்.ஏ. 1 நிமிடம் 27 வினாடிகள் ஓடக்கூடிய அந்த வீடியோவில் பேசியது வருமாறு:-

எங்களது அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக (அ.தி.மு.க.) ஒற்றை தலைமை குறித்து அண்ணன் மதுரை மாவட்ட செயலாளர் ராஜன் செல்லப்பா கூறிய கருத்தில் எனக்கும் உடன்பாடு உண்டு. அவர் சொன்னது போல் ஒற்றை தலைமையும், வலிமையான தலைமையாக, சுயநலமற்ற தலைமையாக இருக்க வேண்டும் என்று நான் கோரிக்கை வைக்கிறேன்.

புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். ஆகட்டும், இதய தெய்வம் புரட்சி தலைவி அம்மா (ஜெயலலிதா) ஆகட்டும் தனது குடும்பத்தை ஒதுக்கி வைத்து விட்டு கழகமே தனது குடும்பம் என வாழ்ந்து மறைந்தனர். இந்த இரு தலைவர்கள் உருவாக்கிய இந்த அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தை யார் தனது குடும்பத்திற்காக மிரட்டினாலும் சரி, பிளவுபடுத்த எண்ணினாலும் சரி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தில் மீண்டும் ஒரு சசிகலாவாகத்தான் கழக தொண்டர்கள் நினைப்பார்கள் என்பதை தலைவர்கள் புரிந்து கொண்டு கழகத்திற்காக தன்னை அர்ப்பணித்து வாழ வேண்டுமே தவிர, தனது குடும்பத்திற்காக கழகத்தை வளைக்க நினைப்பது எங்களுக்கும், கழக தொண்டர்களுக்கும் வேதனை அளிக்கிறது என்பதை தலைமைக்கு இதன் வாயிலாக தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் அந்த வீடியோவில் பேசியிருந்தார்.

இதையடுத்து ஆர்.டி.ராமச்சந்திரன் எம்.எல்.ஏ., நேற்று காலை தனியார் தொலைக்காட்சிக்கு தொலைபேசி மூலம் அளித்த பேட்டி வருமாறு:-

அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமை குறித்து நான் யாரையும் குறிப்பிட்டு சொல்லவில்லை. யாருக்கும் ஆதரவு தெரிவிக்கவில்லை. போட்டியை உருவாக்க வேண்டும் என்ற எண்ணத்திலும் கூறவில்லை. எனது மனதில் இருந்த வருத்தம், குமுறலை வெளிப்படுத்தினேன். பெரம்பலூர் மாவட்ட அ.தி.மு.க. தொண்டர்களின் கருத்தைத்தான் நான் தெரிவித்துள்ளேன். கட்சியில் போர்க்கொடி தூக்குவதற்காக நான் இந்த கருத்தை கூறவில்லை. கட்சி தலைமை மீதான நடவடிக்கையில் இருக்கக்கூடிய வருத்தம் தான் எனது கருத்து. இதுவும் கட்சி கட்டுப்பாட்டை மீறிய செயல் என்பதால் நான் முதலில் அதற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.ராஜன் செல்லப்பா மற்றும் எனது கருத்து குறித்து கட்சி தலைமை உரிய முடிவெடுக்க வேண்டும். எனவே மாட்ட செயலாளர்கள் மற்றும் செயற்குழு கூட்டத்தை கூட்டி நிர்வாகிகளின் வருத்தம் குறித்து கேட்டறிய வேண்டும். யார் தவறு செய்தாலும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மத்திய மந்திரி சபையில் இடம் கிடைக்கும் என்று அ.தி.மு.க.வினர் எதிர்பார்த்து இருந்தனர். ஆனால் இரட்டை தலைமையால் அது கிடைக்காமல் போனது தொண்டர்களிடையே வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் தர்ம யுத்தத்தை எந்த கருவை முன்னிறுத்தி நடத்தினாரோ? அந்த நிலைப்பாட்டில் இருந்து விலகி, தனது மகனுக்காக மத்திய மந்திரி சபையில் இடம் கேட்டுள்ள தகவல் மூலம் குடும்ப அரசியலை முன்னிறுத்தியுள்ளது தெரியவந்துள்ளது. இதனால் மத்திய மந்திரி சபையில் அ.தி.மு.க.வுக்கு இடம் இல்லை என்பதை உணர முடிகிறது. பா.ஜ.க. கூட்டணியில் உள்ள மற்றொரு மாநில முதல்- மந்திரி தனது கட்சிக்கு 2, 3 மத்திய மந்திரி பதவிகளை கேட்டார். ஆனால் அவ்வாறு கொடுக்க முடியாது என்று பா.ஜ.க.வினர் கூறிவிட்டதால் மத்திய மந்திரி பதவியே வேண்டாம் என்று அந்த முதல்- மந்திரி கூறிவிட்டார். ஆனால் அ.தி.மு.க. தலைமையால் பொதுமக்களுக்கு தெரியப்படுத்தும் வகையில் அப்படி கூறமுடியவில்லை.

இது இரட்டை தலைமையால் ஏற்பட்டுள்ள கோளாறே ஆகும். அ.தி.மு.க.வில் தொண்டர்கள், எம்.எல்.ஏ.க்கள் மாவட்ட செயலாளர்கள் அனைவரும் ஒற்றுமையுடன் செயல்படுகின்றனர். எனவே அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமையை உருவாக்க வேண்டும். இதன் மூலம் கட்சி பலம் பெறும். யாராலும் கட்சியை அழிக்க முடியாது. ஒற்றை தலைமை குறித்து நான் கூறிய கருத்து சரியான தருணம். ஏனென்றால் குழப்பத்தை ஏற்படுத்தி கொண்டிருக்கிற காலம் என்பதால் அந்த காரணத்தை கூறியுள்ளேன். மற்ற மாவட்ட செயலாளர்களும். இதே கருத்தைத்தான் வலியுறுத்துவார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story