வேப்பந்தட்டை அருகே மானை வேட்டையாடிவர் கைது; 3 நாட்டு துப்பாக்கிகள் பறிமுதல்


வேப்பந்தட்டை அருகே மானை வேட்டையாடிவர் கைது; 3 நாட்டு துப்பாக்கிகள் பறிமுதல்
x
தினத்தந்தி 10 Jun 2019 4:30 AM IST (Updated: 10 Jun 2019 1:14 AM IST)
t-max-icont-min-icon

வேப்பந்தட்டை அருகே மானை வேட்டையாடிவரை போலீசார் கைது செய்து, அவரிடம் இருந்த 3 நாட்டு துப்பாக்கிகளை பறிமுதல் செய்தனர். மேலும் தப்பியோடிய 5 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

வேப்பந்தட்டை,

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுகா வெண்பாவூர் வனப்பகுதியில் 100 ஏக்கருக்கும் மேற்பட்ட காப்புக் காடுகள் உள்ளன. இதில் மான்கள் மற்றும் காட்டு பன்றிகள்கள் ஏராளமாக உள்ளன. இந்த வனப்பகுதியில் மான் வேட்டையாடும் கும்பல் சிலர் அவ்வப்போது மானை வேட்டையாடி வருகின்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு கை.களத்தூர் போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது வெண்பாவூருக்கும்- கிருஷ்ணாபுரத்திற்கும் இடையே ஒரு கும்பல் ஒரு மானை வேட்டையாடி விட்டு வந்து கொண்டிருந் தனர். அவர்களை போலீசார் மடக்கி பிடிக்க முயன்றபோது, ஒருவர் சிக்கிக்கொண்டார். மற்ற 5 பேரும் தப்பி ஓடிவிட்டனர்.

துப்பாக்கிகள் பறிமுதல்

அப்போது கழுத்து அறுபட்ட நிலையில் ஒரு மான் மற்றும் 3 நாட்டு துப்பாக்கிகள், 3 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் மான் வேட்டையாட பயன்படுத்திய பொருட்கள் ஆகியவற்றை அங்கேயே போட்டுவிட்டு தப்பி ஓடிவிட்டனர். சிக்கி கொண்டவரிடம் விசாரித்தபோது, அவர் அன்னமங்கலத்தை சேர்ந்த மதலைமுத்து(வயது 54) என்பதும், அவருடன் மான் வேட்டையில் ஈடுபட்டது ஈச்சங்காடு கிராமத்தை சேர்ந்த ஜோசப்(40), பெரிய வடகரை ஜமால்(30), வெண்பாவூர் தமிழ்(25), வெங்கலம் ரவி(30), அதே ஊரை சேர்ந்த மணி(30) என்பதும் தெரிய வந்தது.

வலைவீச்சு

பின்னர் போலீசார் இறந்து கிடந்த மான் மற்றும் 3 நாட்டு துப்பாக்கிகள், 3 மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்து அவைகளை வேப்பந்தட்டை வனசரக அலுவலர் குமாரிடம் ஒப்படைத்தனர். இதனை தொடர்ந்து வனச்சரக அலுவலர் குமார் மற்றும் வனத்துறையினர் வழக்குப்பதிந்து மதலைமுத்துவை கைது செய்து பெரம்பலூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். மேலும் தப்பி ஓடிய 5 பேரை வனத்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story