நெய்வேலி என்.எல்.சி. அனல் மின் நிலையத்தில் விபத்து; டெக்னீசியன் பலி
நெய்வேலி என்.எல்.சி. அனல் மின்நிலையத்தில் ஏற்பட்ட விபத்தில் டெக்னீசியன் ஒருவர் பலியானார். படுகாயமடைந்த மற்றொருவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
நெய்வேலி,
கடலூர் மாவட்டம் நெய்வேலியில் என்.எல்.சி. இந்தியா நிறுவனம் உள்ளது. இங்குள்ள திறந்தவெளி சுரங்கங்களில் இருந்து நிலக்கரி வெட்டி எடுக்கப்பட்டு, அனல் மின்நிலையங்கள் மூலம் மின்சாரம் தயாரிக்கப்படுகிறது. இந்த மின்சாரம் தமிழகம் மட்டுமின்றி புதுச்சேரி, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும் வினியோகம் செய்யப்படுகிறது.
மின்சாரம் தயாரிப்பதற்காக 2–ம் அனல் மின்நிலையத்தில் தலா 210 மெகா வாட் திறன் கொண்ட 7 அலகுகள் உள்ளன. இதில் உள்ள 6–வது அலகில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டு, கடந்த சில நாட்களாக பராமரிப்பு பணிகள் நடைபெற்றது. இந்த பணிகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில் நேற்று முதல் அந்த அனல் மின்நிலையம் செயல்படத்தொடங்கியது.
இதற்காக நேற்று மதியம் 1 மணி அளவில் 6–வது அலகில் நிலக்கரி நிரப்பப்பட்டது. இந்த பணியில் பெரியகாப்பான்குளத்தை சேர்ந்தவரும், நெய்வேலி 29–வது வட்டத்தில் உள்ள என்.எல்.சி. குடியிருப்பில் வசித்து வந்தவருமான வேல்முருகன்(வயது 47), மேலக்குப்பத்தை சேர்ந்த பாவாடை(53) ஆகிய இருவரும் ஈடுபட்டனர்.
டெக்னீசியனான இருவரும் லிப்டில் சென்றபடி அலகை கண்காணித்தனர். அப்போது அதிக அழுத்தம் காரணமாக அலகின் ஒரு வால்வு திறந்ததாக கூறப்படுகிறது. அதில் இருந்து அதிகளவு வெப்பம் வெளியாகி உள்ளது. இதனால் அந்த அலகு முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டு, லிப்ட் மேலே சென்று நின்றது.
வெப்பம் தாங்க முடியாமல் தவித்த இருவரும் வாக்கி–டாக்கி மூலம் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து என்.எல்.சி. அதிகாரிகள், மத்திய தொழிலக பாதுகாப்பு படையினர் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். மின்சாரம் இல்லாததால் லிப்ட்டை கீழே இறக்க முடியவில்லை. மாலை 5.30 மணி வரை போராடி, இருவரும் மீட்கப்பட்டனர்.
உடனடியாக 2 பேரையும் சிகிச்சைக்காக என்.எல்.சி. பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள், ஏற்கனவே வேல்முருகன் இறந்து விட்டதாக கூறினர். பாவாடைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக அவர், சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
விபத்து பற்றி தகவல் அறிந்ததும் என்.எல்.சி. இந்தியா நிறுவன தலைவர் ராக்கேஷ்குமார் மற்றும் இயக்குனர்கள் நேரில் வந்து வேல்முருகன் மற்றும் பாவாடையின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினர். அப்போது தலைவர் ராக்கேஷ்குமார், வேல்முருகன் குடும்பத்துக்கு என்.எல்.சி.யால் அனைத்து உதவிகளும் செய்யப்படும் என்றும், படுகாயமடைந்த பாவாடைக்கு உயர் சிகிச்சை என்.எல்.சி. செலவில் அளிக்கப்படும் என்றும் கூறினார்.
என்.எல்.சி.யில் ஏற்பட்ட விபத்தில் பலியான வேல்முருகனுக்கு உஷா என்ற மனைவியும், அருள்பாண்டியன் என்ற மகனும், சுகந்தி, ஜெயந்தி என்ற 2 மகள்களும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. விபத்து தொடர்பாக நெய்வேலி தெர்மல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.