ஆஸ்டின்பட்டி– கரடிக்கல் இடையே எய்ம்ஸ் ஆஸ்பத்திரிக்காக 4 வழிச்சாலை அமைக்கும் பணி தொடங்கியது


ஆஸ்டின்பட்டி– கரடிக்கல் இடையே எய்ம்ஸ் ஆஸ்பத்திரிக்காக 4 வழிச்சாலை அமைக்கும் பணி தொடங்கியது
x
தினத்தந்தி 9 Jun 2019 11:15 PM GMT (Updated: 9 Jun 2019 10:26 PM GMT)

எய்ம்ஸ் மருத்துவமனைக்காக தேர்வு செய்யப்பட்ட பகுதியான ஆஸ்டின்பட்டி–கரடிக்கல் இடையே 4 வழிச்சாலை அமைக்கும் பணி தொடங்கி நடந்து வருகிறது.

திருப்பரங்குன்றம்,

தமிழகத்தில் உலகத்தரம் வாய்ந்த சிகிச்சை அளிக்கப்படும் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய வேண்டும் என்பது தமிழகம் மற்றும் கேரளாவை சேர்ந்த 19 மாவட்ட மக்களின் நீண்டகால எதிர்ப்பார்ப்பாக இருந்தது. எனவே தென்பகுதியில் எய்ம்ஸ் ஆஸ்பத்திரி அமைக்க வேண்டும் என்று அரசை வலியுறுத்தி வந்தனர். அதன் பயனாக மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட தோப்பூர் ஊராட்சிக்குட்பட்ட கோ.புதுப்பட்டியில் எய்ம்ஸ் ஆஸ்பத்திரி அமைவதற்கு 224.24 ஏக்கர் பரப்பளவு கொண்ட இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதில் 750 படுக்கை வசதி, ஆராய்ச்சி மையம் உள்ளிட்ட பல்வேறு வசதி கொண்ட கட்டமைப்புகள் உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கிடையே கோ.புதுப்பட்டியில் எய்ம்ஸ் ஆஸ்பத்திரி அமைவதற்காக கடந்த டிசம்பர் மாதம் மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது. மேலும் ரூ.1.264 கோடி நிதி ஒதுக்கியதாக அறிவித்தது.

இந்தநிலையில் கடந்த ஜனவரி மாதம் மதுரையில் நடந்த விழாவில் பிரதமர் மோடி கலந்துகொண்டு எய்ம்ஸ் ஆஸ்பத்திரிக்கு அடிக்கல் நாட்டினார். இதனையடுத்து ஒருசில நாளிலோ அல்லது ஒருசில வாரத்திலோ எய்ம்ஸ் ஆஸ்பத்திரிக்கான கட்டுமான பணி தொடங்கும் என்று தென் மாவட்ட மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்தனர். ஆனால் அடிக்கல் நாட்டி 4 மாதங்களுக்கு மேலாகிவிட்ட நிலையில் எந்த பணியும் தொடங்கப்படாமல் உள்ளது. அடிக்கல் நாட்டுவதற்கு முன்பு வரை வருவாய்த்துறை அதிகாரிகள் முகாமிட்டு பணிகள் செய்தவாறு இருந்தனர். ஆனால் தற்போது அந்த பகுதியில் ஆள் நடமாட்டம் கூட இல்லாத நிலை உள்ளது.

இதற்கிடையே தமிழக அரசால் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்திற்கு எய்ம்ஸ் ஆஸ்பத்திரிக்காக ஒதுக்கப்பட்ட நிலம் இதுவரை ஒப்படைக்கப்படாமல் உள்ளது என்று தகவல் அறியும் உரிமை சட்ட மனு மூலம் தெரியவந்துள்ளது. இந்த தகவல் தென்மாவட்ட மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இது ஒருபுறம் இருப்பினும் எய்ம்ஸ் ஆஸ்பத்திரி அமையக்கூடிய பகுதியான ஆஸ்டின்பட்டி முதல் கரடிக்கல் சாலை எல்லை வரை உள்ள 20 அடி ரோட்டை 4 வழிச்சாலையாக மாற்ற திட்டம் தயாரிக்கப்பட்டது. அதற்காக மத்திய சாலை திட்டத்தின் கீழ் ரூ.21 கோடியே 20 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதில் ஆஸ்டின்பட்டி–கரடிக்கல் இடையே 3.5 கி.மீ. தூரம் 4 வழிச்சாலையாகவும், 6.4 கி.மீ. தூரம் வரை இருவழிச்சாலையாகவும் அமைக்க திட்டம் தயாரிக்கப்பட்டு அதற்கான பணிகள் தொடங்கியுள்ளது.

ஆஸ்டின்பட்டி–கரடிக்கல் இடையே பல இடங்களில் சாலை துண்டிக்கப்பட்டு காங்கிரீட் பாலம் அமைப்பதற்காக வானம் தோண்டப்பட்டு வருகிறது. சாலை அமைக்கும் பணி தொடங்கப்பட்டு இருப்பதால், எய்ம்ஸ் ஆஸ்பத்திரிக்கான கட்டுமான பணிகள் விரைவில் தொடங்கும் என்று பொதுமக்களிடையே நம்பிக்கை வந்துள்ளது. இதேசமயம் எய்ம்ஸ் ஆஸ்பத்திரிக்கான நிலத்தை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்திற்கு தமிழக அரசு வழங்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story