மார்த்தாண்டம் அருகே காரில் கஞ்சா கடத்திய மாணவர் உள்பட 3 பேர் கைது


மார்த்தாண்டம் அருகே காரில் கஞ்சா கடத்திய மாணவர் உள்பட 3 பேர் கைது
x
தினத்தந்தி 11 Jun 2019 4:30 AM IST (Updated: 10 Jun 2019 8:50 PM IST)
t-max-icont-min-icon

மார்த்தாண்டம் அருகே காரில் கஞ்சா கடத்தி வந்த பள்ளி மாணவர் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

குழித்துறை,

குமரி மாவட்டத்தில் பள்ளி–கல்லூரி மாணவர்களுக்கு ஒரு கும்பல் கஞ்சா விற்பனை செய்து வருவதாக போலீசாருக்கு புகார்கள் வந்தன. இதனை தடுக்கவும், குற்றவாளிகளை கைது செய்யவும் போலீசார் தீவிர வாகனச்சோதனையில் ஈடுபட்டு வந்தனர்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு மார்த்தாண்டம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அவர்கள் பம்மம் பகுதியில் சென்றபோது, அந்த வழியாக ஒரு கார் வேகமாக வருவதை கண்டனர். உடனே, போலீசார் அந்த காரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர்.

மாணவர்களுக்கு விற்பனை

சோதனையில், காரில் 200 கிராம் கஞ்சா மறைத்து வைத்திருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து போலீசார் காரில் இருந்த 3 பேரையும் பிடித்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில், அவர்கள் மார்த்தாண்டம் அருகே நட்டாலத்தை சேர்ந்த           ரபீஷ்மோன்(வயது 19), மார்த்தாண்டம் பாளையங்கெட்டியை சேர்ந்த சுதீஷ்(21), மற்றோருவர் குழித்துறையை சேர்ந்த 17 வயது சிறுவன் என்பதும், இவர் மார்த்தாண்டம் பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் படித்து வருவதும் தெரியவந்தது. மேலும், அவர்கள் கஞ்சாவை கடத்தி வந்து பள்ளி–கல்லூரி மாணவர்களுக்கு விற்பனை செய்து வந்ததும் தெரிந்தது.

3 பேர் கைது

அதைத்தொடர்ந்து போலீசார் 3 பேரையும் கைது செய்து கஞ்சாவையும், கடத்தலுக்கு பயன்படுத்திய காரையும் பறிமுதல் செய்தனர். கஞ்சாவை எங்கிருந்து வாங்கினர், யாருக்கெல்லாம் விற்பனை செய்துள்ளனர் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story