மாவட்ட செய்திகள்

கடன்களை தள்ளுபடி செய்ய கோரி விவசாயிகள் கஞ்சித்தொட்டி திறக்க முயற்சி + "||" + Farmers seeking to open debts are trying to open the giant

கடன்களை தள்ளுபடி செய்ய கோரி விவசாயிகள் கஞ்சித்தொட்டி திறக்க முயற்சி

கடன்களை தள்ளுபடி செய்ய கோரி விவசாயிகள் கஞ்சித்தொட்டி திறக்க முயற்சி
கடன்களை தள்ளுபடி செய்ய கோரி திருச்சி கலெக்டர் அலுவலகம் முன்பு விவசாயிகள் கஞ்சித்தொட்டி திறக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருச்சி,

தமிழகத்தில் வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும், 8 வழிச்சாலை திட்டத்திற்கு விவசாய நிலங்களை கையகப்படுத்தக் கூடாது என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் திருச்சி கலெக்டர் அலுவலகம் முன்பு கஞ்சித்தொட்டி திறந்து போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.


அதன்படி போராட்டம் நடத்த சங்கத்தின் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் நேற்று காலை திருச்சி கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்தனர். அவர்கள் கஞ்சி காய்ச்சுவதற்கான பொருட்கள் மற்றும் பாத்திரங்களை எடுத்து வந்தனர்.

கலெக்டர் அலுவலகம் முன்பு அடுப்புகள் அமைத்து கஞ்சி காய்ச்ச முயன்றனர். அப்போது விவசாயிகள் பலர் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் உடனடியாக விரைந்து வந்து அய்யாக்கண்ணு மற்றும் விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

மேலும் கஞ்சி தொட்டி திறக்க வேண்டாம் எனவும், கலெக்டரை சந்தித்து மனு கொடுக்கவும் அறிவுறுத்தினர். இதில் சமரசமடைந்த விவசாயிகள் கஞ்சி தொட்டி திறக்கும் போராட்டத்தை கைவிட்டனர். மேலும் கலெக்டர் சிவராசுவை சந்தித்து கோரிக்கை தொடர்பாக மனு கொடுத்தனர். விவசாயிகளின் போராட்டத்தால் கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று காலை பரபரப்பாக காணப்பட்டது.

முன்னதாக அய்யாக்கண்ணு நிருபர்களுக்கு அளித்த பேட்டியின்போது கூறுகையில், “விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற திருச்சி வரும் முதல்-அமைச்சரிடம் மனு கொடுக்கப்படும். கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்காவிட்டால் வருகிற 24-ந் தேதி சென்னையில் தொடர் போராட்டம் நடத்தப்படும்” என்றார்.

அதிகம் வாசிக்கப்பட்டவை