பயிர்க்காப்பீட்டு தொகை வழங்காததை கண்டித்து கூட்டுறவு வங்கியை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டம்


பயிர்க்காப்பீட்டு தொகை வழங்காததை கண்டித்து கூட்டுறவு வங்கியை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டம்
x
தினத்தந்தி 11 Jun 2019 4:30 AM IST (Updated: 11 Jun 2019 12:34 AM IST)
t-max-icont-min-icon

பயிர்க்காப்பீட்டு தொகை வழங்காததை கண்டித்து கீழ்வேளூரில் கூட்டுறவு வங்கியை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.அப்போது போராட்டக்காரர்கள், போலீசாரிடம வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கீழ்வேளூர்,

2017-18-ம் ஆண்டுக்கான பயிர்க்காப்பீட்டு தொகை நாகை மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் பலருக்கு இதுவரை வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதனை வழங்க வலியுறுத்தி கடைமடை விவசாயிகள் பல்வேறு போராட்டங்களை நடத்தினர். இதற்கு எந்தவித நடவடிக்கை எடுக்காததால் ஆத்திரமடைந்த கீழ்வேளூர் ஊராட்சி அகரகடம்பனூர், நாங்குடி, வடகரை, ஆனைங்கலம் உள்ளிட்ட 15 கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் நேற்று கீழ்வேளூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு அனைத்து விவசாயிகள் சங்க பொறுப்பாளர் வீரமுரசு தலைமை தாங்கினார். விவசாயிகள் சங்க நிர்வாகிகள் காமராஜ், ராமச்சந்திரன், கவுதமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

வாக்குவாதம்

இதில் பயிர் காப்பீடு தொகை வழங்க நடவடிக்கை எடுக்காத மத்திய, மாநில அரசுகளை கண்டித்து விவசாயிகள் கோஷங்கள் எழுப்பினர். பின்னர் கூட்டுறவு வங்கி அதிகாரிகளிடம் விளக்கம் கேட்க வங்கியின் உள்ளே விவசாயிகள் நுழைய முயன்றனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். இதனால் விவசாயிகளுக்கும், போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து காப்பீடு தொகை கிடைக்கும் வரை கூட்டுறவு வங்கியை விட்டு கலைந்து செல்ல போவதில்லை என கூறி விவசாயிகள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இந்த போராட்டத்தில் 500-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்துகொண்டனர். 
1 More update

Next Story