அரசு பள்ளி ஆசிரியை பணியிட மாற்றம்: மாணவ- மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டம்


அரசு பள்ளி ஆசிரியை பணியிட மாற்றம்: மாணவ- மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டம்
x
தினத்தந்தி 10 Jun 2019 11:00 PM GMT (Updated: 10 Jun 2019 7:38 PM GMT)

பெரம்பலூர் அருகே அரசு பள்ளி ஆசிரியை பணியிட மாற்றம் செய்யப்பட்டதை கண்டித்து மாணவ- மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

பாடாலூர்,

பெரம்பலூர் அருகே உள்ள பொம்மனப்பாடியில் அரசு ஆதிதிராவிட நல தொடக்கப்பள்ளி ஒன்று உள்ளது. இந்த பள்ளியில் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை மாணவ-மாணவிகளுக்கு பாடங்கள் கற்பிக்கப்பட்டு வருகிறது. இதில் சுமார் 50-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்த பள்ளியில் கடந்த 3 ஆண்டுகளாக தேனி மாவட்டத்தை சேர்ந்த ஷீலா என்கிற ஆசிரியை பணிபுரிந்து வந்தார். இவர் அந்த பள்ளியில் 1-ம் வகுப்பு முதல் 4-ம் வகுப்பு வரை மாணவ-மாணவிகளுக்கு பாடங்களை கற்பித்து வந்துள்ளார். இவர் தனியார் பள்ளிகளுக்கு நிகராக மாணவ-மாணவிகளுக்கு சிறப்பாக பாடங்களை கற்று கொடுத்து வந்ததாக, மாணவர்களின் பெற்றோர் கூறுகின்றனர். இதனால் ஆசிரியை ஷீலா பாடங்களை கற்பிக்கும் போது, மாணவ-மாணவிகள் மிகுந்த ஆர்வத்துடன் கவனிப்பார்களாம். அந்த அளவுக்கு ஆசிரியை ஷீலா மாணவ-மாணவிகளின் மனதில் பதிந்து விட்டார்.

மேலும் அரசு பள்ளியில் இப்படி ஒரு ஆசிரியை சிறப்பாக பாடங்களை கற்பித்து கொடுக்கிறாரா? என்று கேள்விப்பட்ட தனியார் பள்ளியில் தனது குழந்தைகளை படிக்க வைக்கும் பெற்றோர் நிறைய பேர், தனது குழந்தைகளை ஆசிரியை ஷீலா கற்பிக்கும் பள்ளியிலேயே சேர்த்தனர். இதனால் அந்த பள்ளியின் மாணவர் சேர்க்கை ஆண்டுதோறும் அதிகரிக்க தொடங்கியது. இந்த நிலையில் திடீரென்று ஆசிரியை ஷீலா பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா நத்தக்காடு அரசு ஆதிதிராவிட நல தொடக்கப்பள்ளிக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அந்த ஆசிரியையும் மனமில்லாமல் மாறி சென்றதாக தெரிகிறது. இதனை அறிந்த மாணவ-மாணவிகள் மற்றும் அவர்களின் பெற்றோர்கள், ஆசிரியை ஷீலாவை இந்த பள்ளியில் இருந்து மாற்றக்கூடாது என்றும், அவரது பணியிட மாறுதலை ரத்து செய்யக்கோரி வலியுறுத்தியும் வந்தனர். ஆனால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்கவில்லையாம்.

இதனால் ஷீலா ஆசிரியை பணியிட மாற்றம் செய்ததை கண்டித்து நேற்று அந்த பள்ளியில் பயிலும் மாணவ-மாணவிகள் தங்களது வகுப்புகளை புறக்கணித்து பள்ளி முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் ஆசிரியை ஷீலாவை மீண்டும் எங்கள் பள்ளியில் பணியமர்த்த கோரி கோஷங்களை எழுப்பினர். மேலும் மாணவர்களுக்கு ஆதரவாக, அவர்களின் பெற்றோரும், ஊர் பொதுமக்களும் ஷீலா ஆசிரியை மீண்டும் இதே பள்ளியில் பணியமர்த்த கோரி கோஷங்களை எழுப்பினர்.

இதையடுத்து மாணவ-மாணவிகளின் பெற்றோர் கூறுகையில், ஷீலா ஆசிரியை பணியிட மாறுதலாகி சென்று விட்டதால், எங்களது குழந்தைகள் தற்போது பள்ளிக்கு போகமாட்டோம் என்று அடம் பிடிக்கின்றனர். அந்த ஆசிரியையால் எங்கள் குழந்தைகள் நன்றாக படித்து வந்தனர். எனவே ஷீலா ஆசிரியை மீண்டும் இதே பள்ளியில் பணியமர்த்த வேண்டும். இல்லையென்றால் எங்களது குழந்தைகளை மாற்று சான்றிதழ் வாங்கிக் கொண்டு வேறு பள்ளியில் சேர்த்து விடுவோம் என்றனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பள்ளிக்கு வந்து மாணவ-மாணவிகளிடமும், அவர்களின் பெற்றோரின் பேச்சுவார்த்தை நடத்தி அறிவுரை கூறினர். இதையடுத்து அந்த மாணவ-மாணவிகள் வகுப்புகளுக்கு சென்றனர். ஆசிரியை பணியிட மாற்றம் செய்ததை கண்டித்து மாணவ-மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டது பெரம்பலூர் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story