கலெக்டர் அலுவலகத்தில் வேளாண் விளைபொருட்களின் விற்பனை அரங்கம் திறப்பு


கலெக்டர் அலுவலகத்தில் வேளாண் விளைபொருட்களின் விற்பனை அரங்கம் திறப்பு
x
தினத்தந்தி 11 Jun 2019 4:15 AM IST (Updated: 11 Jun 2019 1:46 AM IST)
t-max-icont-min-icon

புதுக்கோட்டை கலெக்டர் அலுவ லகத்தில் வேளாண் விளை பொருட்களின் விற்பனை அரங்கம் திறக்கப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை,

புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில் திங்கட் கிழமை தோறும் நடைபெறும் குறைதீர்க்கும் நாள் கூட்டத்திற்கு வரும் பொதுமக்கள் பயனடையும் வகையில், விவசாயிகளின் உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் மூலம் உற்பத்தி செய்யப்படும் பாரம்பரிய நெல் ரகங்கள், சிறுதானியங்கள், மதிப்பு கூட்டப்பட்ட விவசாய பொருட்கள் அடங்கிய விற்பனை அரங்கினை நேற்று கலெக்டர் உமா மகேஸ்வரி திறந்து வைத்து பார்வையிட்டார். அப்போது மாவட்ட வருவாய் அதிகாரி சாந்தி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் கோமதிதங்கம், வேளாண்மை துணை இயக்குனர் சிவக்குமார் உள்பட பலர் உடன் இருந்தனர்.

தொடர்ந்து கலெக்டர் உமா மகேஸ்வரி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

புதுக்கோட்டை மாவட்டத்தில் உழவர் உற்பத்தியாளர் குழுக்களால் செயல்படுத்தப்படும், உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களை மேம்படுத்திட மதிப்புக்கூட்டப்பட்ட விவசாய பொருட்களை விற்பனை செய்யும் நோக்கில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக புதுக்கோட்டை இயற்கை உழவர் உற்பத்தியாளர் நிறுவனம், இலுப்பூர் உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் ஆகியவை 1000 விவசாயிகளை உறுப்பினர்களாகக்கொண்டு இயங்கி வருகிறது.

நீடித்த மானாவாரி வேளாண்மை இயக்கத்தின் மூலம் உழவர் உற்பத்தியாளர் குழுக்களுக்கு எந்திரங்கள் கொள்முதல் செய்ய நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. தற்போது திறந்து வைக்கப்பட்டு உள்ள விற்பனை அரங்கில் பாரம்பரிய அரிசி வகைகள், மதிப்பு கூட்டப்பட்ட சிறுதானிய, பயறு மற்றும் 102 வகையான மதிப்பு கூட்டப்பட்ட உணவு பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன. பொதுமக்கள் உழவர்களிடம் இருந்து நமது பாரம்பரியமிக்க இயற்கை வேளாண் விளை பொருட்களை வாங்கி பயனடைய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story