வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்; கிராம மக்கள் கலெக்டரிடம் மனு
வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எஸ்.வலையப்பட்டியை சேர்ந்த கிராம மக்கள் கலெக்டரிடம் மனு அளித்துள்ளனர்.
மதுரை,
மதுரை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இதில் கலெக்டர் (பொறுப்பு) சாந்தகுமார் மனுக்களை பெற்றார்.
கிறிஸ்தவ காட்டுநாயக்கன் நாடோடி பழங்குடி மக்கள் சார்பில் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:–
மதுரை மாவட்டம் சமயநல்லூர் அருகில் உள்ள சத்திய மூர்த்தி நகரில் கடந்த 1965–ம் ஆண்டு முதல் வசித்து வருகிறோம். 1990–ம் ஆண்டு சில குடும்பத்தினர் கிறிஸ்தவ மதத்திற்கு மாறினோம். இதன்காரணமாக எங்களுக்கு சிலர் தொடர்ந்து மன உளைச்சல் கொடுத்து வருகின்றனர். மேலும் எங்களை ஊரைவிட்டு ஒதுக்கி வைத்துள்ளனர். ஊர் சாவடியில் உட்கார கூடாது. பொதுகுழாயில் தண்ணீர் பிடிக்க கூடாது. கடையில் பொருட்கள் வாங்கக்கூடாது. அவ்வாறு செய்தால் அபராதம் விதிக்கிறார்கள். இந்த கட்டப்பஞ்சாயத்து கொடுமையால் 2 பேர் தற்கொலை செய்துள்ளனர். எங்கள் மக்கள் உள்ள 10–க்கும் மேற்பட்ட ஊர்களில் இந்த பிரச்சினை உள்ளது. எனவே கட்டப்பஞ்சாயத்து முறையை தடையை செய்ய வேண்டும். எங்கள் வழிபாடு முறையை தொடர உரிய பாதுகாப்பு வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
உசிலம்பட்டி தாலுகா கோவிலாலங்குளம் கிராம மக்கள் கொடுத்த மனுவில், ‘‘எங்கள் ஊரின் மெயின் ரோட்டில் இருந்து குடியிருப்புக்கு செல்லும் பொதுப்பாதையை தனிநபர் ஒருவர் ஆக்கிரமித்துள்ளார். இதனால் எங்கள் குழந்தைகள் பள்ளிகளுக்கு செல்ல முடியாமல் ஊரை சுற்றி செல்ல வேண்டி உள்ளது. அவசரத்திற்கு ஆஸ்பத்திரிக்கும் செல்ல முடியவில்லை. எனவே இந்த ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும்.‘‘ என்று கூறப்பட்டுள்ளது.
திருமங்கலம் எஸ்.வலையப்பட்டி சேர்ந்த கிராம மக்கள் கலெக்டரிடம் கொடுத்த மனுவில், ‘‘எங்கள் ஊரில் சிலர் வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டனர். இதில் 4 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. வீடுகள், மோட்டார் சைக்கிள்கள் சேதப்படுத்தப்பட்டது. இதற்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்‘‘ என்று கூறப்பட்டு இருந்தது.