வாக்குப்பதிவு எந்திர சந்தேகம் குறித்து எதிர்க்கட்சிகள் ஆலோசனை நடத்தும் : சரத்பவார் பேச்சு
வாக்குப்பதிவு எந்திரத்தின் சந்தேகம் குறித்து எதிர்க்கட்சிகள் டெல்லியில் கூடி ஆலோசனை நடத்தும் என தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் பேசினார்.
மும்பை,
நாடு முழுவதும் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதா மகத்தான வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை பிடித்தது. எதிர்க்கட்சிகள் படுதோல்வியை தழுவின.
இந்தநிலையில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் 20-ம் ஆண்டு விழா மும்பையில் நடந்தது. இதில் அக்கட்சியின் நிறுவனர் சரத்பவார் கலந்துகொண்டு பேசியதாவது:-
தேர்தல் வாக்குப்பதிவு நடைமுறையின்போது தேர்தல் அதிகாரி ஒருவர் அங்குள்ள எந்திரத்தின் அருகே அமர்ந்திருப்பார். நீங்கள் வாக்குப்பதிவு எந்திரத்தில் பொத்தானை அழுத்தியவுடன் விவிபாட் எந்திரத்தில் யாருக்கு வாக்களித்தீர்கள் என்பதை காட்டுகிறது.
வாக்களித்தவர்கள் அங்கிருந்து புறப்பட்டு சென்றதும் அங்குள்ள அதிகாரியால் வாக்கை எப்படி வேண்டுமானாலும் மாற்ற முடியும். பிரச்சினை அந்த இடத்தில் தான் உள்ளது. அங்கு என்ன நடக்கிறது என்பதை கண்டறியவேண்டும்.
வாக்காளர்கள் ஒருபோதும் தங்கள் ஓட்டு வேறொருவருக்கு செல்கிறது என்று நினைத்துவிடக்கூடாது. அவர்கள் தற்போது அமைதியாக இருக்கின்றனர். ஆனால் சட்டத்தை அவர்கள் கையில் எடுத்துக்கொள்ள கூடும். இதற்கு நாம் அனுமதித்து விடக்கூடாது. நாம் ஜனநாயகத்தை காப்பாற்ற வேண்டும்.
இந்த பிரச்சினை குறித்து எதிர்க்கட்சிகளுடன் சேர்ந்து டெல்லியில் ஆலோசனை நடத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில் தேசியவாத காங்கிரசை சேர்ந்த முன்னாள் துணை முதல்-மந்திரி அஜித் பவார் பேசுகையில், “3 மாதங்களுக்கு முன்பு காங்கிரஸ் கட்சி ராஜஸ்தான் மற்றும் மத்திய பிரதேசம், தெலுங்கானா மாநிலங்களை கைப்பற்றியது. ஆனால் நாடாளுமன்ற தேர்தலில் தெலுங்கானா முதல்-மந்திரியின் மகள் தோல்வி அடைந்துள்ளார். வாக்குப்பதிவு எந்திரம் சரியாக இயங்கியிருந்தால் நீங்கள் (பா.ஜனதா) எப்படி தோல்வியுற்ற இடங்களை கைப்பற்றி இருக்க முடியும்?
இது வேறு பிரச்சினை. இதை கட்சியின் தொண்டர்கள் மறந்துவிட்டு விரைவில் வர இருக்கும் சட்டசபை தேர்தல் வெற்றியில் முழு கவனத்தை செலுத்தவேண்டும். நாடாளுமன்ற தேர்தல் குறித்து அதிகம் சிந்திக்க தேவையில்லை” என்றார்.
Related Tags :
Next Story