திருவாரூர்-காரைக்குடி ‘டெமு’ ரெயில் சேவையில் மாற்றம் வாரத்தில் 3 நாட்கள் மட்டும் இயக்கப்படும்


திருவாரூர்-காரைக்குடி ‘டெமு’ ரெயில் சேவையில் மாற்றம் வாரத்தில் 3 நாட்கள் மட்டும் இயக்கப்படும்
x
தினத்தந்தி 12 Jun 2019 4:15 AM IST (Updated: 12 Jun 2019 1:03 AM IST)
t-max-icont-min-icon

திருவாரூர்-காரைக்கடி ‘டெமு’ ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. வாரத்தில் 3 நாட்கள் மட்டும் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

திருச்சி,

திருவாரூர்-காரைக்குடி இடையே மீட்டர் கேஜ் பாதை அகல ரெயில் பாதையாக மாற்றப்பட்ட பின் முதல் ரெயில் சேவை கடந்த 1-ந் தேதி தொடங்கியது. திருவாரூர்-காரைக்குடி இடையே வாரத்தில் 6 நாட்கள் ‘டெமு’ ரெயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. சேவை தொடங்கிய முதல் நாளில் திருவாரூரில் இருந்து காரைக்குடி புறப்பட்டு சென்ற போது குறிப்பிட்ட 6 மணி நேர பயண நேரத்தை விட தாமதமானது.இந்த வழித்தடத்தில் ரெயில்வே கேட்டுகளில் கேட் கீப்பர் இல்லாததால் ரெயிலில் முன் பக்கம் மற்றும் பின் பக்கம் தலா ஒரு ஊழியர் பணியில் நியமிக்கப்பட்டுள்ளனர். ரெயில்வே கேட்டுகளை கடந்து செல்லும் போது, ரெயிலில் இருந்து ஊழியர் இறங்கி கேட்டை திறப்பதும், மூடுவதும் அதன்பின் ரெயில் செல்வதுமாக உள்ளது. இதனால் பயண நேரம் அதிகமாகி காலதாமதமாகுகிறது.

இந்த ரெயில் சேவையை அறிவித்தப்படி இயக்குவதில் ரெயில்வே நிர்வாகத்தினருக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. ரெயில்வே கேட்டுகளில் உடனடியாக ஊழியர்கள் நியமிக்க முடியவில்லை என்பதாலும், காலிப்பணியிடங்களை நிரப்ப முடியாததாலும் இந்த பிரச்சினைக்கு தற்போது எந்த தீர்வும் ஏற்படாது. இதனால் திருவாரூர்-காரைக்குடி ரெயில் சேவையில் மாற்றம் செய்து திருச்சி கோட்ட ரெயில்வே நிர்வாகம் நேற்று அறிவித்தது.

அதன்படி வாரத்தில் 3 நாட்கள் மட்டும் இயக்கப்படும் எனவும், காரைக்குடி-திருவாரூர் இடையே ஒரு சேவையை குறைத்தும், பயண நேரத்தை 8 மணி நேரமாகவும் மாற்றி உள்ளது.

திருவாரூரில் இருந்து திங்கள், புதன், வெள்ளி ஆகிய கிழமைகளில் ரெயில் (வண்டி எண் 06847) காலை 8.15 மணிக்கு புறப்பட்டு காரைக்குடிக்கு மாலை 4.15 மணிக்கு சென்றடையும். காரைக்குடியில் இருந்து செவ்வாய், வியாழன், சனி ஆகிய கிழமைகளில் ரெயில் (06848) காலை 9.45 மணிக்கு புறப்பட்டு திருவாரூருக்கு மாலை 5.45 மணிக்கு சென்றடையும். இந்த சேவை மாற்றம் நேற்று முதல் அமலுக்கு வந்தது. வருகிற ஆகஸ்டு மாதம் 30-ந் தேதி வரை இந்த முறை அமலில் இருக்கும். இந்த சேவை மாற்றத்தால் பயணிகள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

Next Story