ரூ.2½ லட்சம் லஞ்சம் வாங்கிய சிட்கோ அதிகாரி உள்பட 3 பேர் கைது


ரூ.2½ லட்சம் லஞ்சம் வாங்கிய சிட்கோ அதிகாரி உள்பட 3 பேர் கைது
x
தினத்தந்தி 11 Jun 2019 10:30 PM GMT (Updated: 11 Jun 2019 8:26 PM GMT)

ரூ.2½ லட்சம் லஞ்சம் வாங்கிய சிட்கோ அதிகாரி உள்பட 3 பேரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.

மும்பை, 

நவிமும்பை ரபாலே பகுதியில் சட்டவிரோத கட்டுமான பணிகள் குறித்து சிட்கோ அதிகாரி பிரித்தம்சிங் ஆய்வு செய்தார். இதில் கட்டுமான அதிபர் ஒருவர் அங்கு சட்டவிரோதமாக கட்டிடம் கட்டும் பணி செய்து வந்தது தெரியவந்தது.

இது தொடர்பாக அதிகாரி பிரித்தம்சிங் கட்டுமான அதிபரை சந்தித்து சட்டவிரோத கட்டுமானம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டாமெனில் தனக்கு ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் லஞ்சமாக தர வேண்டும் என கேட்டார்.

இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த கட்டுமான அதிபர் இதுபற்றி லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார். இதையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசார் சிட்கோ அதிகாரி பிரித்தம் சிங்கை கையும், களவுமாக பிடிக்க திட்டமிட்டனர். இதற்காக அவர்கள் கட்டுமான அதிபரிடம் ரசாயன பொடி தடவிய ரூ.2 லட்சத்து 50 ஆயிரத்தை கொடுத்து அனுப்பினர்.

இதன்பேரில் கட்டுமான அதிபர் நேற்று முன்தினம் சி.பி.டி. பேலாப்பூரில் ராய்காட் பவன் அலுவலகத்தில் இருந்த அதிகாரி பிரித்தம் சிங்கை சந்தித்து, அந்த பணத்தை கொடுக்க முயன்றார்.

அப்போது அவர் பணத்தை தனது உதவியாளர் பிரதிப் பாட்டீல், நில அளவையாளர் விகாஷ் ஆகியோரிடம் கொடுக்கும் படி கூறினார். இதன்பேரில் கட்டுமான அதிபர் அவர்களிடம் பணத்தை கொடுத்தார். அப்போது, அங்கு மறைந்து இருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் 2 பேரையும் அதிரடியாக கைது செய்தனர். மேலும் அவர்கள் கொடுத்த தகவலின்பேரில் அதிகாரி பிரித்தம் சிங்கும் கைது செய்யப்பட்டார்.

இது தொடர்பாக 3 பேர் மீதும் லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story