மோட்டார் சைக்கிளில் சென்றபோது விபத்து அமைச்சரின் சகோதரர் மகன் கால் துண்டிப்பு; எடப்பாடி பழனிசாமி நலம் விசாரித்தார்


மோட்டார் சைக்கிளில் சென்றபோது விபத்து அமைச்சரின் சகோதரர் மகன் கால் துண்டிப்பு; எடப்பாடி பழனிசாமி நலம் விசாரித்தார்
x
தினத்தந்தி 11 Jun 2019 10:45 PM GMT (Updated: 11 Jun 2019 9:04 PM GMT)

அமைச்சரின் சகோதரர் மகன் மோட்டார் சைக்கிளில் சென்றபோது ஏற்பட்ட விபத்தில் கால் துண்டானது.

பூந்தமல்லி,

சட்டத்துறை அமைச்சராக இருப்பவர் சி.வி.சண்முகம். இவரது சகோதரர் சி.வி.ராதாகிருஷ்ணன் ஆழ்வார்பேட்டையில் வசித்து வருகிறார். இவரது மகன் அர்ஜுன் (வயது 20). காட்டாங்கொளத்தூரில் உள்ள தனியார் கல்லூரியில் மருத்துவப் படிப்பு படித்து வருகிறார்.

இவருக்கு ரூ.24 லட்சம் மதிப்புடைய ஆடம்பர மோட்டார் சைக்கிள் வாங்கி கொடுக்கப்பட்டது. இதனை வண்டலூர்–மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் கடந்த சில நாட்களாக காலை நேரங்களில் ஓட்டி வந்துள்ளார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை பூந்தமல்லி அடுத்த மலையம்பாக்கம் அருகே வண்டலூர்–மீஞ்சூர் சாலையில் மோட்டார் சைக்கிளை வேகமாக ஓட்டிச்சென்ற போது நிலை தடுமாறி கீழே விழுந்தார்.

இதில் அவரது காலில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அவரை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். இதில் அவரது வலது கால் காயம் காரணமாக துண்டிக்கப்பட்டது.

இந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அர்ஜுனை முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து நலம் விசாரித்தார்.


Next Story