பாபநாசம் அணை நீர்மட்டம் 39 அடியாக உயர்வு: குற்றாலத்தில் சாரல் மழை அருவிகளில் சுற்றுலா பயணிகள் உற்சாக குளியல்


பாபநாசம் அணை நீர்மட்டம் 39 அடியாக உயர்வு: குற்றாலத்தில் சாரல் மழை அருவிகளில் சுற்றுலா பயணிகள் உற்சாக குளியல்
x
தினத்தந்தி 13 Jun 2019 3:15 AM IST (Updated: 12 Jun 2019 6:05 PM IST)
t-max-icont-min-icon

குற்றாலத்தில் சாரல் மழை பெய்தது. அருவிகளில் சுற்றுலா பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர். பாபநாசம் அணை நீர்மட்டம் 39 அடியாக உயர்ந்தது.

தென்காசி, 

குற்றாலத்தில் சாரல் மழை பெய்தது. அருவிகளில் சுற்றுலா பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர். பாபநாசம் அணை நீர்மட்டம் 39 அடியாக உயர்ந்தது.

சாரல் மழை 

கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கியதாலும், மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்த மழையாலும், நெல்லை மாவட்டம் குற்றாலத்தில் சீசன் தொடங்கியது. குற்றாலத்தில் நேற்று காலையில் இருந்தே சாரல் மழை நாள் முழுவதும் பெய்து கொண்டிருந்தது. அவ்வப்போது லேசான வெயில் அடித்தது. மெயின் அருவி, ஐந்தருவியில் தண்ணீர் விழுந்தது.

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் நேற்று மழை பெய்யாததால், குற்றாலம் அருவிகளில் தண்ணீர் வரத்து குறைந்தது. எனினும் மெயின் அருவியில் சுற்றுலா பயணிகள் நீண்ட வரிசையில் நின்று உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்.

ஐந்தருவியில் விழுந்த தண்ணீரிலும் சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்ந்தனர். ஐந்தருவியில் குளித்த சுற்றுலா பயணியின் தலையில் சிறிய கல் விழுந்தது. இதில் அவர் லேசான காயம் அடைந்தார். உடனே போலீசார் அங்கு குளிக்க தடை விதித்தனர். சிறிதுநேரத்துக்கு பின்னர் ஐந்தருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளை போலீசார் மீண்டும் அனுமதித்தனர்.

அணைகள் நீர்மட்டம் உயர்வு 

மேற்கு தொடர்ச்சி மலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த மழை காரணமாக அணைகளுக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்தது. நேற்று முன்தினம் 31 அடியாக இருந்த பாபநாசம் அணையின் நீர்மட்டம் நேற்று 8 அடி உயர்ந்து 39.40 அடியை எட்டியது. இதேபோன்று நேற்று முன்தினம் 58.30 அடியாக இருந்த மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் நேற்று 58.50 அடியாக உயர்ந்தது.

கொடுமுடியாறு அணையில் நீர்மட்டம் 3 அடி உயர்ந்து 10 அடியாகவும், அடவிநயினார் அணையில் நீர்மட்டம் 5 அடி உயர்ந்து 27 அடியாகவும் இருந்தது.

Next Story