விபத்தில் இருந்து தப்பிய வைகை எக்ஸ்பிரஸ் ரெயில் பெட்டியின் கொக்கி கழன்று விழுந்ததில் தண்டவாளம் உடைந்ததால் பரபரப்பு


விபத்தில் இருந்து தப்பிய வைகை எக்ஸ்பிரஸ் ரெயில் பெட்டியின் கொக்கி கழன்று விழுந்ததில் தண்டவாளம் உடைந்ததால் பரபரப்பு
x
தினத்தந்தி 12 Jun 2019 11:00 PM GMT (Updated: 12 Jun 2019 7:28 PM GMT)

மணப்பாறை அருகே வைகை எக்ஸ்பிரஸ் ரெயில் பெட்டியின் கொக்கி கழன்று விழுந்ததில் தண்டவாளம் உடைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதில் அதிர்ஷ்டவசமாக வைகை எக்ஸ்பிரஸ் விபத்தில் இருந்து தப்பியது.

மணப்பாறை,

நாட்டின் வட மாநிலங்கள் மற்றும் தமிழகத்தின் வட மாவட்டங்களில் இருந்து தென் தமிழகத்திற்கும், இங்கிருந்து அப்பகுதிகளுக்கும் செல்லும் ரெயில்களின் பிரதான வழித்தடமாக திருச்சி மாவட்டத்தில் உள்ள மணப்பாறை பகுதி உள்ளது. இதில் தினமும் காலை மதுரையில் இருந்து சென்னைக்கு இயக்கப்படும் வைகை எக்ஸ்பிரஸ் ரெயில் 8.34 மணிக்கு மணப்பாறை ெரயில் நிலையத்திற்கு வந்து, 8.35 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு செல்வது வழக்கம்.

அதன்படி நேற்று காலை அந்த ரெயில் மதுரையில் இருந்து சென்னை நோக்கி புறப்பட்டு வந்தது. மணப்பாறை ரெயில் நிலையத்திற்கு 8.53 மணிக்கு வந்த ரெயில், பயணிகளை ஏற்றிக்கொண்டு 8.56 மணிக்கு புறப்பட்டு திருச்சி நோக்கி சென்றது.

மணப்பாறையை அடுத்த கண்ணுடையான்பட்டி ரெயில்வே கேட் அருகே சென்றபோது திடீரென பயங்கர சத்தம் கேட்டது. இதனால் சுதாரித்துக்கொண்ட ரெயில் என்ஜின் டிரைவர், உடனடியாக ரெயிலை நிறுத்தினார். ரெயிலில் இருந்து இறங்கி வந்து பார்த்தபோது, ரெயில் பெட்டியில் இருந்த கொக்கி கழன்று கீழே விழுந்து கிடந்தது.

மேலும் சாலையை கடக்கும் இடத்தில் தண்டவாளத்தை ஒட்டி அமைக்கப்பட்டிருந்த துணை தண்டவாளம் சுமார் 2 அடி நீளத்துக்கு கம்பி உடைந்து, சுமார் 100 அடி தூரம் இழுத்துச் செல்லப்பட்டு விழுந்து கிடந்தது தெரியவந்தது.

இது தொடர்பான தகவலை ரெயில்வே ஊழியர்கள், மணப்பாறை ரெயில் நிலையத்திற்கும், ரெயில்வே அதிகாரிகளுக்கும் தெரிவித்தனர். இதையடுத்து வைகை எக்ஸ்பிரஸ் ரெயில் சுமார் 10 நிமிட தாமதத்திற்கு பின்னர் அங்கிருந்து திருச்சி நோக்கி புறப்பட்டுச் சென்றது.

சாலையை கடக்கும் இடத்தில் தண்டவாளத்தை ஒட்டி இருந்த துணை தண்டவாளம் மட்டுமே சிறிது உடைந்ததால் ரெயில் போக்குவரத்தில் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. ரெயில் போக்குவரத்து தொடர்ந்து நடைபெற்றது.

இந்த சம்பவத்தில் ரெயிலின் கடைசி பெட்டியில் இருந்த கொக்கி கழன்று விழுந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. ஏனெனில் இடையில் உள்ள பெட்டியில் இருந்த கொக்கி கழன்று விழுந்து, தண்டவாளம் உடைந்திருந்தால், பெரும் விபத்து ஏற்பட்டிருக்க வாய்ப்பு உள்ளது. இதனால் அதிர்ஷ்டவசமாக அந்த ரெயில் விபத்தில் இருந்து தப்பியது.

இதற்கிடையே சத்தம் கேட்டு அப்பகுதியில் பொதுமக்கள் கூடினர். மேலும் இந்த சம்பவம் நடந்த பகுதியில் கண்ணுடையான்பட்டி அரசு பள்ளி உள்ளதால், அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில் ரெயில் பெட்டியில் இருந்த ஏர்குழாய் உடைந்ததால், ரெயில் நிறுத்தப்பட்டதாக ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story