மணலி புதுநகரில் ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்ற எதிர்ப்பு; 26 பேர் கைது
மணலி புதுநகரில் ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்த 26 பேர் கைது செய்யப்பட்டனர்.
மீஞ்சூர்,
திருவள்ளூர் மாவட்டம் மணலி புதுநகர் பகுதியில் அரசு நிலத்தில் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டுவதற்கான பணியில் ஈடுபட்டுள்ளது. அந்த இடத்தில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக 21 வீடுகள் ஆக்கிரமித்து கட்டப்பட்டு அதில் மக்கள் வசித்து வந்தனர்.
இந்தநிலையில் நேற்று மணலி புதுநகர் இடையஞ்சாவடி பகுதி குடிசை மாற்று வாரிய செயற்பொறியாளர் கமலக்கண்ணன், மாதவரம் துணை போலீஸ் கமிஷனர் ரவளி பிரியா, இன்ஸ்பெக்டர் அன்பழகன் ஆகியோர் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி சம்பவ இடத்திற்கு சென்று ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கு இருந்த ஆண்கள் 11 பேர், பெண்கள் 15 பேர் என 26 பேர் வாக்குவாதத்தில் ஈடுபட்டு எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்களை மணலி புதுநகர் போலீசார் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.
பின்னர் 3 பொக்லைன் எந்திரங்கள் உதவியுடன் 21 வீடுகளை அகற்றி குடிசை மாற்று வாரிய நிலத்தை மீட்டனர்.
ஆக்கிரமிப்பு இடத்தில் குடியிருந்தவர்கள் சான்றுகள் அளிக்கும் பட்சத்தில் இங்கு கட்டப்படும் அடுக்குமாடி குடியிருப்பில் வாரிய விதிமுறைகளின்படி வீடுகள் ஒதுக்கப்படும் என தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய சென்னை கோட்ட உதவி பொறியாளர் தியாகராஜன் தெரிவித்தார்.
ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றப்பட்டதையடுத்து பாதுகாப்புக்காக 100–க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர்.