தண்ணீர் திறந்து விட மறுக்கும் கர்நாடக அரசை கண்டித்து காவிரி ஆற்றுக்குள் இறங்கி விவசாயிகள் போராட்டம்


தண்ணீர் திறந்து விட மறுக்கும் கர்நாடக அரசை கண்டித்து காவிரி ஆற்றுக்குள் இறங்கி விவசாயிகள் போராட்டம்
x
தினத்தந்தி 12 Jun 2019 11:00 PM GMT (Updated: 12 Jun 2019 8:20 PM GMT)

காவிரியில் தண்ணீர் திறந்து விட மறுக்கும் கர்நாடக அரசை கண்டித்து திருச்சி காவிரி ஆற்றுக்குள் இறங்கி விவசாயிகள் நூதன போராட்டம் நடத்தினார்கள்.

திருச்சி,

தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர் உள்ளிட்ட காவிரி பாசன மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து ஜூன் 12-ந்தேதி தண்ணீர் திறந்து விடப்படுவது வழக்கம். ஆனால் மேட்டூர் அணையில் போதுமான நீர் இருப்பு இல்லாததால் தண்ணீர் திறக்கப்படவில்லை. இந்த ஆண்டு மட்டும் அல்ல. கடந்த பல ஆண்டுகளாகவே இதே நிலை தான் நீடிக்கிறது.

காவிரி நடுவர் மன்றம் மற்றும் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப் படி கர்நாடக மாநில அரசு காவிரியில் தண்ணீர் திறந்து விடவில்லை. சமீபத்தில் காவிரி ஆணையத்தின் கண்காணிப்பு குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கர்நாடக மாநில அரசு தமிழகத்திற்கு உடனடியாக 9.2 டி.எம்.சி. தண்ணீர் திறந்து விடவேண்டும் என உத்தரவிட்டது. ஆனால் அந்த உத்தரவின்படி கர்நாடகம் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட மறுத்து விட்டது.

மேட்டூர் அணை திறக்கப்படாததால் காவிரி ஆறு வறண்டு் காட்சி அளிக்கிறது. காவிரி பாசன பகுதியில் குறுவை சாபடி செய்யவேண்டிய விவசாயிகள் அதற்கு வழி இல்லாமல் தவிப்பதோடு குடிநீருக்காக போராடி வரும் நிலை ஏற்பட்டு உள்ளது. இந்நிலையில் காவிரி கண்காணிப்பு குழு உத்தரவிட்டும் தண்ணீர் திறந்து விட மறுத்து வரும் கர்நாடக அரசு மீது நடவடிக்கை எடுக்க கோரி திருச்சியில் நேற்று விவசாயிகள் நூதன போராட்டம் நடத்தினார்கள்.

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் திருச்சி ஓயாமரி சுடுகாடு அருகே தில்லைநாயகம் படித்துறை பகுதியில் காவிரி ஆற்றுக்குள் விவசாயிகள் இறங்கினார்கள். பின்னர் அவர்கள் ஆற்றுக்குள் இடுப்பு அளவிற்கு மணல் தோண்டி அதற்குள் உட்கார்ந்தனர்.

மத்திய அரசே காவிரியில் தண்ணீர் திறந்து விட மறுக்கும் கர்நாடக அரசை ‘டிஸ்மிஸ்’ செய், தமிழக அரசே மேட்டூர் அணையை திறக்க நடவடிக்கை எடு இல்லையேல் எங்களை சாகவிடு, எங்களை கொன்று புதைத்து விடு என கோஷம் போட்டனர். அவர்கள் கைகளில் சிறுநீர் நிரப்பப்பட்டிருந்த பாட்டில் களையும் வைத்து இருந்தனர். போராட்டத்தில் பெண்கள் உள்பட சுமார் 100 பேர் பங்கேற்றனர். இந்த போராட்டம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுபற்றிய தகவல் அறிந்ததும் கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகவேல் தலைமையில் போலீசார் அங்கு வந்தனர். அவர்கள் போராட்டம் நடத்திய அய்யாக்கண்ணுவுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இந்த போராட்டம் பற்றி தமிழக அரசுக்கு தகவல் தெரிவிப்பதாக உறுதி அளித்தனர். இதனை தொடர்ந்து விவசாயிகள் தங்களது போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

இதனை தொடர்ந்து நிருபர்களுக்கு பேட்டி அளித்த அய்யாக்கண்ணு, ‘90 ஆயிரம் ஏக்கரில் சாகுபடி செய்து வந்த கர்நாடகம் இன்று ஏராளமான குளங்களை வெட்டி 30 லட்சம் ஏக்கரில் சாகுபடி செய்து வருகிறது. உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட பின்னரும், காவிரி நடுவர் மன்றத்தின் இறுதி தீர்ப்பினை அமல்படுத்தாமல் தண்ணீர் திறக்க முடியாது என அடம் பிடித்து வருகிறது. உச்ச நீதிமன்ற தீர்ப்பை நிறைவேற்ற மறுத்து வரும் கர்நாடக மாநில அரசை மத்திய அரசு ‘டிஸ்மிஸ்’ செய்யவேண்டும்’ என்றார்.

Next Story