உள்ளாட்சி தேர்தலிலும் தி.மு.க. அமோக வெற்றி பெறும் மு.க.ஸ்டாலின் பேச்சு


உள்ளாட்சி தேர்தலிலும் தி.மு.க. அமோக வெற்றி பெறும் மு.க.ஸ்டாலின் பேச்சு
x
தினத்தந்தி 14 Jun 2019 4:45 AM IST (Updated: 14 Jun 2019 12:06 AM IST)
t-max-icont-min-icon

உள்ளாட்சி தேர்தலிலும் தி.மு.க. அமோக வெற்றி பெறும் என அரவக்குறிச்சியில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து பேசுகையில் மு.க.ஸ்டாலின் கூறினார்.

கரூர்,

கரூர் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் இரவு கோவையில் இருந்து கார் மூலம் கரூர் வந்தார்.

இதையடுத்து அவருக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அதன்பின்னர் கரூரில் உள்ள ஒரு ஓட்டலில் மு.க.ஸ்டாலின் தங்கி இரவு ஓய்வு எடுத்தார்.

நேற்று காலை அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்ட தி.மு.க. வேட்பாளர் செந்தில்பாலாஜியை வெற்றி பெற செய்ததற்கும், கரூர் நாடாளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட ஜோதிமணியை வெற்றி பெற செய்ததற்கும் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிப்பதற்காக மு.க.ஸ்டாலின் கார் மூலம் கரூரில் இருந்து அரவக்குறிச்சிக்கு புறப்பட்டு சென்றார். காலை 7.30 மணிக்கு புங்கம்பாடி பிரிவு சாலையில் திரண்டிருந்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார். தொடர்ந்து அவர்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.

அப்போது அவர்கள், நீங்கள் ஆட்சிக்கு வராததுதான் எங்களுக்கு பெரும் குறையாக உள்ளது. நீங்கள் ஆட்சிக்கு வந்திருந்தால் நகைக்கடன் தள்ளுபடி, இளைஞர், பெண்களுக்கு வேலைவாய்ப்பு, விவசாயக்கடன் தள்ளுபடி உள்ளிட்ட நலத்திட்டங்கள் கிடைத்திருக்கும். அரவக்குறிச்சி பகுதியில் 10 முதல் 15 நாட்களுக்கு ஒருமுறைதான் குடிநீர் வருதால் சிரமப்படுகிறோம். மக்கள் என்றும் உங்கள் பக்கம்தான் உள்ளோம். எப்போது தேர்தல் வந்தாலும் உங்களை முதல்-அமைச்சராக்குவோம். அரசு வேலைவாய்ப்பு தேர்வுகளுக்கு இப்பகுதியில் பயிற்சி மையங்கள் இல்லை என்று தெரிவித்தனர்.

அவர்கள் மத்தியில் மு.க.ஸ்டாலின் பேசுகையில், உள்ளாட்சி தேர்தல் விரைவில் நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலில் அனைத்து இடங்களிலும் தி.மு.க. அமோக வெற்றி பெறும். அப்போது உங்களின் அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும். அப்போது மக்கள் பிரதிநிதிகளை நீங்கள் தேடிச்செல்லவேண்டாம். அவர்கள் உங்களை தேடிவந்து உங்கள் குறைகளை தீர்ப்பார்கள். ஆங்காங்கே தாலுகா அளவில் பயிற்சி மையம் ஏற்படுத்தி அரசுத்தேர்வுகளை எளிதில் எதிர்கொள்ளும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும். ஜெயித்தாலும், தோற்றாலும் மக்களோடு மக்களாக நின்று மக்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றுவது தி.மு.க. தான். என்றார்.

Next Story