4 வகையான திருமண உதவித்தொகை பெற மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பிக்கலாம் கலெக்டர் தகவல்


4 வகையான திருமண உதவித்தொகை பெற மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பிக்கலாம் கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 13 Jun 2019 10:45 PM GMT (Updated: 13 Jun 2019 9:21 PM GMT)

மாற்றுத்திறனாளிகள் 4 வகையான திருமண உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட கலெக்டர் எஸ்.சிவராசு தெரிவித்து உள்ளார்.

திருச்சி,

திருச்சி மாவட்டத்தில், 2019-2020-ம் நிதியாண்டிற்கு 4 வகையான திருமண நிதியுதவி திட்டத்தின் கீழ் திருமண நிதியுதவி பெற மாற்றுத்திறனாளிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. கை, கால் பாதிக்கப்பட்டோரை நல்ல நிலையில் உள்ளோர் திருமணம் புரியும் திருமண நிதியுதவி திட்டம், பார்வையற்றோரை நல்ல நிலையில் உள்ளோர் திருமணம் புரியும் திருமண நிதியுதவி திட்டம், காது கேளாத மற்றும் வாய்பேசாதோரை நல்ல நிலையில் உள்ளோர் திருமணம் புரியும் திருமண நிதியுதவி திட்டம், மாற்றுத்திறனாளியை மாற்றுத்திறனாளி திருமணம் செய்யும் திருமண நிதியுதவி திட்டம் ஆகிய 4 திருமண நிதி உதவித்திட்டங்கள் செயல் படுத்தப்பட்டு வருகிறது.

இந்த திட்டங்களின் கீழ் நிதியுதவி மற்றும் தங்க நாணயம் வழங்கப்பட்டு வருகிறது. எனவே, திருச்சி மாவட்டத்தில் திருமணம் புரிந்த மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.25 ஆயிரம் மற்றும் 8 கிராம் தங்க நாணயமும், பட்டம் அல்லது தம்பதியரில் எவரேனும் ஒருவர் பட்டய படிப்பு படித்தவராக இருந்தால் ரூ.50 ஆயிரம் மற்றும் 8 கிராம் தங்க நாணயம் வழங்கப்பட்டு வருகிறது. இத்திருமண தம்பதியர்களில் இருவருக்கும் முதல் திருமணமாக இருத்தல் வேண்டும்.

இத்திட்டத்தில் விண்ணப்பிக்க விரும்புவோர் திருமணம் நடைபெற்று ஓராண்டுக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் திருமண அழைப்பிதழ் மற்றும் பாஸ்போர்ட்டு அளவு புகைப்படம், குடும்ப அட்டையின் நகல், கல்வி சான்றின் நகல் மற்றும் தம்பதியரில் இருவருக்கும் இதுவே முதல் திருமணம் என்பதற்கான சான்று (கிராம நிர்வாக அலுவலரிடம் பெற வேண்டும்) ஆகியவற்றுடன் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் நேரில் வந்து விண்ணப்பிக்கலாம்.

இந்த தகவலை திருச்சி மாவட்ட கலெக்டர் எஸ். சிவராசு தெரிவித்துள்ளார்.

Next Story