போரூரில் மின்சாதன பொருட்கள் பரிசோதனை நிறுவனத்தில் பயங்கர தீ விபத்து ரூ.2 கோடி பொருட்கள் நாசம்


போரூரில் மின்சாதன பொருட்கள் பரிசோதனை நிறுவனத்தில் பயங்கர தீ விபத்து ரூ.2 கோடி பொருட்கள் நாசம்
x
தினத்தந்தி 13 Jun 2019 11:30 PM GMT (Updated: 13 Jun 2019 10:24 PM GMT)

போரூரில் மின்சாதன பொருட்கள் பரிசோதனை நிலையத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் ரூ.2 கோடி மதிப்புள்ள பொருட்கள் தீயில் எரிந்து நாசமாகின.

பூந்தமல்லி, 

போரூர் அடுத்த ராமாபுரத்தைச் சேர்ந்தவர் மகேந்திரன். இவர் போரூர் சக்தி நகரில் மல்டி மீட்டர் உள்ளிட்ட பல்வேறு மின்சாதன பொருட்களின் தரத்தை பரிசோதனை செய்யும் நிறுவனம் நடத்தி வருகிறார். இதில் 15-க்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகின்றனர். நேற்று முன்தினம் இரவு நிறுவனத்தை பூட்டிவிட்டு ஊழியர்கள் அனைவரும் சென்றுவிட்டனர்.

இந்த நிலையில் நேற்று காலை திடீரென நிறுவனத்தில் இருந்து புகை கிளம்பியது. இதனை கண்டதும் அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்ததும் கிண்டி, விருகம்பாக்கம், அசோக் நகர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 4 தீயணைப்பு வாகனங்களில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருந்த தீயை அணைத்தனர்.

பல மணி நேரம் போராடி தீ அணைக்கப்பட்டது. இந்த தீ விபத்தில் அங்கு இருந்த மின்சாதன பொருட்களை பரிசோதனை செய்யும் விலை உயர்ந்த எந்திரங்கள் மற்றும் பரிசோதனைக்காக வந்த பொருட்கள், நிறுத்திவைக்கப்பட்டு இருந்த மோட்டார் சைக்கிள்கள், அலுவலகத்தில் இருந்த கம்ப்யூட்டர் என அனைத்தும் எரிந்து நாசமானது.

குறைந்த மின் அழுத்தம் கொண்ட மின்சாரம் வந்ததே இந்த தீ விபத்துக்கு காரணம் என நிறுவனத்தின் உரிமையாளர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து மின்வாரிய அலுவலகத்தில் பலமுறை புகார் கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் அவர் புகார் தெரிவித்துள்ளார்.

இந்த தீ விபத்து குறித்து போரூர் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். இந்த தீ விபத்தில் சுமார் ரூ.2 கோடி மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து நாசமாகி இருப்பது தெரியவந்தது.

Next Story