சிறுவனுக்கு பாலியல் தொந்தரவு, குண்டர் சட்டத்தில் தி.மு.க. நிர்வாகி கைது - கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்


சிறுவனுக்கு பாலியல் தொந்தரவு, குண்டர் சட்டத்தில் தி.மு.க. நிர்வாகி கைது - கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்
x
தினத்தந்தி 13 Jun 2019 10:15 PM GMT (Updated: 13 Jun 2019 11:32 PM GMT)

சிறுவனை பாலியல் தொந்தரவு செய்ததாக சிறையில் அடைக்கப்பட்ட தி.மு.க. நிர்வாகி குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

பந்தலூர்,

நீலகிரி மாவட்டம் பந்தலூர் தாலுகா நெல்லியாளம் அரசு தேயிலை தோட்ட கழகம் ரேஞ்ச் எண்.3 பகுதியை சேர்ந்த தி.மு.க. நிர்வாகி திராவிடமணி (வயது 54). கடந்த மே மாதம் ஒரு சிறுவனுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்து சிறுவனின் பெற்றோர் சேரம்பாடி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர்.

இதைத்தொடர்ந்து போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன், சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணன் உள்ளிட்ட போலீசார் வழக்கு பதிவு செய்தனர். பின்னர் திராவிடமணியிடம் விசாரணை நடத்தினர். மேலும் சிறுவனிடமும் தனியாக விசாரணை செய்தனர். அப்போது சிறுவன் தரப்பில் பல்வேறு புகார்கள் தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் குற்றம் சாட்டப்பட்ட திராவிடமணியை போலீசார் கைது செய்து பந்தலூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

பின்னர் கூடலூர் கிளை சிறையில் திராவிடமணி அடைக்கப்பட்டார். இந்த நிலையில் திராவிடமணியை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய அனுமதிக்கும்படி மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யாவுக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சண்முகபிரியா, தேவாலா போலீஸ் துணை சூப்பிரண்டு ராமச்சந்திரன் பரிந்துரை செய்தனர். இது குறித்து மாவட்ட உயரதிகாரிகள் விசாரணை நடத்தினர். பின்னர் திராவிடமணியை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து 1 ஆண்டு சிறையில் அடைக்க மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா உத்தரவிட்டார்.

இதற்கான உத்தரவு சேரம்பாடி போலீஸ் நிலையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதையடுத்து கூடலூர் கிளை சிறையில் அடைக்கப்பட்டு இருந்த திராவிடமணியை போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன், சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணன் ஆகியோர் குண்டர் சட்டத்தில் கைது செய்தனர். பின்னர் அவர் கோவை மத்திய சிறைக்கு கொண்டு செல்லப்பட்டு அடைக்கப்பட்டார். சிறுவனுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கில் தி.மு.க. நிர்வாகி குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story