பல்லடம் அருகே மின்சாரம் தாக்கி என்ஜினீயரிங் கல்லூரி மாணவர் பலி
பல்லடம் அருகே மின்சாரம் தாக்கியதில் என்ஜினீயரிங் கல்லூரி மாணவர் பரிதாபமாக இறந்தார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பல்லடம்,
பல்லடம் அருகே உள்ள கணபதிபாளையத்தை சேர்ந்தவர் பரமசிவம். இவருக்கு வெங்கடாசலபதி (வயது 23) மற்றும் முத்துக்குமார் (20) என்ற 2 மகன்கள் உள்ளனர். வெங்கடாசலபதி அந்த பகுதியில் சொந்தமாக ஒர்க் ஷாப் வைத்து நடத்தி வருகிறார்.
முத்துக்குமார் கொடுவாயில் உள்ள ஒரு கல்லூரியில் பி.இ. முதலாம் ஆண்டு படித்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் மதியம் முத்துக்குமார் தனது மோட்டார்சைக்கிளை சர்வீஸ் செய்வதற்காக அண்ணன் வெங்கடாசலபதி நடத்தி வரும் ஒர்க் ஷாப்புக்கு கொண்டு சென்றார். பின்னர் அங்கு மோட்டார் மூலம் தண்ணீரை பீய்ச்சி அடித்து தனது மோட்டார்சைக்கிளை முத்துக்குமாரே சுத்தம் செய்துகொண்டிருந்தார்.
அப்போது எதிர்பாராதவிதமாக அவர் மீது மின்சாரம் தாக்கியதாக தெரிகிறது. இதில் அவர் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இது குறித்து பல்லடம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மாணவர் முத்துக்குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பல்லடம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
அவரது உடலை பார்த்து குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கதறி அழுதனர். இது குறித்து பல்லடம் போலீசில் வெங்கடாசலம் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.