திருவாரூர் மாவட்டத்தில் குடி மராமத்து பணிகளுக்காக ரூ.16 கோடியே 80 லட்சம் நிதி ஒதுக்கீடு அமைச்சர் தகவல்


திருவாரூர் மாவட்டத்தில் குடி மராமத்து பணிகளுக்காக ரூ.16 கோடியே 80 லட்சம் நிதி ஒதுக்கீடு அமைச்சர் தகவல்
x
தினத்தந்தி 15 Jun 2019 11:00 PM GMT (Updated: 15 Jun 2019 6:37 PM GMT)

திருவாரூர் மாவட்டத்தில், குடி மராமத்து பணிகளுக்காக ரூ.16 கோடியே 80 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என அமைச்சர் ஆர்.காமராஜ் கூறினார்.

வடுவூர்,

திருவாரூர் மாவட்டம் வடுவூர் அருகே உள்ளது செருமங்கலம். இந்த கிராமத்தில் 82 ஹெக்டேர் பரப்பளவில் மின்னல் ஏரி அமைந்துள்ளது. இந்த ஏரி கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு தூர்வாரப்பட்டது. இந்த ஏரியில் இருந்து விவசாயிகள், விலையில்லாமல் வண்டல் மண் எடுத்துச்செல்ல இந்த ஆண்டு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்த பணியினை உணவுத்துறை அமைச்சர் ஆர்.காமராஜ் நேற்று தொடங்கி வைத்தார். நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் ஆனந்த் தலைமை தாங்கினார்.

பின்னர் அமைச்சர் ஆர்.காமராஜ் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

தமிழக முதல்-அமைச்சர், விவசாயிகள் தங்கள் விளைநிலங்களை மேம்படுத்த ஏரி, குளங்களில் இருந்து விலையில்லாமல் வண்டல் மண் எடுத்துக்கொள்ளலாம் என உத்தரவிட்டுள்ளார். அதன் அடிப்படையில் கடந்த வாரம் வடுவூர் ஏரியில் இருந்து விவசாயிகளுக்கு விலையில்லாமல் வண்டல் மண் வழங்கும் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டு தொடர்ந்து விவசாயிகள் வண்டல் மண் எடுத்து சென்று விளைநிலங்களை மேம்படுத்தி வருகின்றனர்.

அந்த வகையில் 82 ஹெக்டர் பரப்பளவு கொண்ட செருமங்கலம் மின்னல் ஏரியில் இருந்து விவசாயிகளுக்கு விலையில்லாமல் வண்டல் மண் வழங்கும் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இந்த பகுதியை சேர்ந்த விவசாயிகள் அரசின் இந்த திட்டத்தை பயன்படுத்தி கொண்டு தங்களது விளைநிலங்களை மேம்படுத்த விலையில்லாமல் வண்டல் மண் எடுத்துக்கொள்ளலாம்.

மேலும் தமிழக முதல்-அமைச்சர் கடந்த 2017-ம் ஆண்டு ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்து குடிமராமத்து பணிகளை தொடங்கி வைத்தார். தொடர்ந்து 2018-ம் ஆண்டு ரூ.331 கோடி நிதி ஒதுக்கீடு செய்து குடிமராமத்து பணிகள் மேற்கொள்ளப்பட்டது. அதன்தொடர்ச்சியாக இந்த ஆண்டும் தமிழகத்தில் குடிமராமத்து பணிகளுக்காக ரூ.499 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதில் திருவாரூர் மாவட்டத்திற்கு மட்டும் குடிமராமத்து பணிகளுக்காக ரூ.16 கோடியே 80 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பொதுமக்களின் குடிநீர் தேவையில் அரசு எப்போதுமே கவனம் செலுத்தி வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அதிகாரி பொன்னம்மாள், திருவாரூர் வெண்ணாறு வடிநில கோட்ட செயற்பொறியாளர் திருவேட்டைசெல்லம், உதவி செயற்பொறியாளர் இளங்கோ, உதவி பொறியாளர்கள் ரவீந்திரன், மதியழகன், தாசில்தார் லெட்சுமி பிரபா, நீடாமங்கலம் தெற்கு ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் அரிகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story