சாடிவயல் அருகே, காட்டு யானை தாக்கி மூதாட்டி சாவு


சாடிவயல் அருகே, காட்டு யானை தாக்கி மூதாட்டி சாவு
x
தினத்தந்தி 16 Jun 2019 4:00 AM IST (Updated: 16 Jun 2019 2:10 AM IST)
t-max-icont-min-icon

சாடிவயல் அருகே காட்டு யானை தாக்கி மூதாட்டி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

பேரூர், 

கோவையை அடுத்த சாடிவயல் அருகே பொட்டபதி மலைவாழ் கிராமத்தை சேர்ந்தவர் நஞ்சம்மாள் (வயது 60). நேற்று முன்தினம் நள்ளிரவு 1.30 மணியளவில் இயற்கை உபாதை கழிப்பதற்காக அவர் வீட்டுக்கு பின்பக்கம் சென்றுள்ளார். அப்போது அங்கு புதருக்குள் மறைந்திருந்த காட்டு யானை அவரை தாக்க முயன்றது.

இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் காட்டு யானையிடம் தப்பிக்க ஓடினார். ஆனாலும் காட்டு யானை அவரை துரத்தி சென்று பிடித்து தாக்கி, துதிக்கையால் தூக்கி வீசியது. இதில் படுகாயம் அடைந்த அவர் அலறினார். சத்தம் கேட்டு விரைந்து வந்த அக்கம் பக்கத்தினர் காட்டு யானையை வனப்பகுதிக்குள் விரட்டினர்.

இதை தொடர்ந்து நஞ்சம்மாளை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் சிகிச்சைக்கு வரும் வழியிலேயே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதை தொடர்ந்து அவருடைய உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இதுகுறித்த புகாரின்பேரில் காருண்யா நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் வனத்துறையினரும் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். காட்டு யானை தாக்கி மூதாட்டி இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story