பெட்ரோல் பங்க் மேலாளரிடம் கத்தியை காட்டி மிரட்டி ரூ.14 லட்சம் கொள்ளை மர்ம நபர்களுக்கு வலைவீச்சு


பெட்ரோல் பங்க் மேலாளரிடம் கத்தியை காட்டி மிரட்டி ரூ.14 லட்சம் கொள்ளை மர்ம நபர்களுக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 17 Jun 2019 10:15 PM GMT (Updated: 17 Jun 2019 6:29 PM GMT)

கும்பகோணத்தில் பட்டப்பகலில் பெட்ரோல் பங்க் மேலாளரிடம் கத்தியை காட்டி மிரட்டி ரூ.14 லட்சத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

கும்பகோணம்,

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே தாராசுரத்தில் பெட்ரோல் பங்க் ஒன்று இயங்கி வருகிறது. இங்கு கும்பகோணம் சோலையப்பன் தெருவை சேர்ந்த முத்துக் குமார் (வயது 47) என்பவர் மேலாளராக பணியாற்றி வருகிறார். இவர் நேற்று மதியம் 1.30 மணி அளவில் ரூ.14 லட்சத்தை வங்கியில் செலுத்துவதற்காக மோட்டார் சைக்கிளில் கும்பகோணத்துக்கு சென்று கொண்டிருந்தார்.

அப்போது கார் ஒன்று மோட்டார்சைக்கிளை பின்தொடர்ந்து வந்தது. கும்பகோணம்-தஞ்சை மெயின் ரோட்டில் பேட்டை சாலை தெரு அருகே வந்தபோது, அந்த கார் திடீரென மோட்டார்சைக்கிளை வழிமறித்தது. அதில் இருந்து இறங்கி வந்த மர்ம நபர்கள் முத்துக்குமாரிடம் கத்தியை காட்டி மிரட்டி அவரிடம் இருந்த ரூ.14 லட்சத்தை கொள்ளையடித்து விட்டு காரில் தப்பி சென்றனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த முத்துக்குமார், இந்த சம்பவம் குறித்து உடனடியாக பெட்ரோல் பங்கின் உரிமையாளருக்கு தகவல் தெரிவித்தார். இதுகுறித்து தகவல் அறிந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மகேஸ்வரன், கும்பகோணம் துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெயசந்திரன் ஆகியோர் சம்பவம் நடந்த பகுதிக்கு விரைந்து சென்று அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்கள் மூலமாக விசாரணை மேற்கொண்டனர்.

இதில் பணத்தை கொள்ளையடிக்க மர்மநபர்கள் பயன்படுத்திய காரின் அடையாளம் தெரிந்தது. இதுகுறித்து கும்பகோணம் கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து பணத்தை கொள்ளையடித்த மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள். கும்பகோணத்தில் பட்டப்பகலில் பெட்ரோல் பங்க் மேலாளரிடம் ரூ.14 லட்சம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

Next Story