தடைக்காலம் முடிந்து கடலுக்கு சென்ற நாகை மீனவர்கள் கரை திரும்பினர் குறைந்த அளவு மீன்கள் சிக்கியதால் ஏமாற்றம்


தடைக்காலம் முடிந்து கடலுக்கு சென்ற நாகை மீனவர்கள் கரை திரும்பினர் குறைந்த அளவு மீன்கள் சிக்கியதால் ஏமாற்றம்
x
தினத்தந்தி 18 Jun 2019 4:30 AM IST (Updated: 18 Jun 2019 12:10 AM IST)
t-max-icont-min-icon

தடைக்காலம் முடிந்து மீன்பிடிக்க சென்ற நாகை மீனவர்கள் கரை திரும்பினர். மீனவர்கள் வலையில் குறைந்த அளவு மீன்கள் சிக்கியதால் அவர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

நாகப்பட்டினம்,

நாகை மாவட்டத்தில் அக்கரைப்பேட்டை, கீச்சாங்குப்பம், நம்பியார்நகர், செருதூர், வெள்ளப்பள்ளம், வாணவன்மகாதேவி, விழுந்தமாவடி, வேதாரண்யம், ஆறுகாட்டுத்துறை, புஷ்பவனம், கோடியக்கரை உள்பட பல மீனவ கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் உள்ள மீனவர்கள் விசைப்படகுகள் மற்றும் நாட்டுப்படகுகளை பயன்படுத்தி மீன்பிடித்து வருகிறார்கள். மீன்களின் இனப்பெருக்கத்தை கருத்தில் கொண்டு தமிழக கடலோர மாவட்டங்களில் மீன்பிடி தடைக்காலம் ஆண்டுதோறும் அமல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான மீன்பிடி தடைக்காலம் கடந்த 14-ந் தேதி நிறைவடைந்தது. இதைத்தொடர்ந்து நாகை மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.

ஆழ்கடலுக்கு சென்று மீன்பிடி தொழில் செய்யும் விசைப்படகு மீனவர்கள் சுமார் 5 முதல் 7 நாட்கள் வரை நடுக்கடலில் படகிலேயே தங்கி மீன்பிடித்து வருவது வழக்கம். இதனால் விசைப்படகு மீனவர்கள் தங்களுக்கு தேவையான உணவு, குடிநீர் மற்றும் மீன்பிடிக்க தேவையான மீன்பிடி கருவிகள், ஜஸ் ஆகியவற்றை தங்கள் படகில் ஏற்றி தயார் நிலையில் வைத்து இருந்தனர்.

நாகையில் இருந்து மீன்பிடிக்க ஆழ்கடலுக்கு சென்ற 800-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் சுமார் 6 ஆயிரம் மீனவர்கள் சென்றனர். இவ்வாறு சென்ற படகுகளில், சில படகுகள் நேற்று கரை திரும்பின. இதில் மீனவர்களின் வலைகளில் வஞ்சரம், சீலா, ஓரா, கெளுத்தி, செம்மீன், கடல் விறால், வவ்வால் மற்றும் பாறை உள்ளிட்ட மீன்கள் சிக்கி இருந்தன.

இந்த மீன்களை மீனவர்கள் படகில் இருந்து தரம் பிரித்து எடுத்து ஏலக்கூடத்துக்கு கொண்டு சென்றனர். இதனால் சுமார் 60 நாட்களாக வெறிச்சோடி கிடந்த அக்கரைப்பேட்டை மீன்பிடி துறைமுக ஏலக்கூடம் நேற்று வியாபாரிகள் கூட்டத்தால் களைகட்டியது. மேலும் மீன்களை வாங்க ஏராளமான பொதுமக்களும் மீன்இறங்கு தளத்தில் குவிந்தனர். 61 நாட்கள் மீன்பிடிக்க செல்லாமல் தற்போது மீன்பிடிக்க சென்ற மீனவர்களின் வலைகளில் குறைந்த அளவு மீன்களே சிக்கி இருந்தன. இதனால் தாங்கள் ஏமாற்றம் அடைந்து உள்ளதாகவும் எதிர்பார்த்த அளவு பெரிய மீன்கள் சிக்கவில்லை என்றும் மீனவர்கள் கூறினர். பல நாட்களுக்கு பிறகு மீன்கள் கிடைத்து உள்ளதால் அசைவ பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Next Story