மாணவ- மாணவிகளுக்கு 3 லட்சம் விலையில்லா பாட புத்தகங்கள் கலெக்டர் எஸ்.சிவராசு தகவல்


மாணவ- மாணவிகளுக்கு 3 லட்சம் விலையில்லா பாட புத்தகங்கள் கலெக்டர் எஸ்.சிவராசு தகவல்
x
தினத்தந்தி 17 Jun 2019 10:45 PM GMT (Updated: 17 Jun 2019 8:08 PM GMT)

திருச்சி மாவட்டத்தில் மாணவ மாணவிகளுக்கு 3 லட்சத்து 10 ஆயிரத்து 984 விலையில்லா பாட புத்தகங்கள் வழங்கப்பட்டு வருகிறது என கலெக்டர் எஸ்.சிவராசு தெரிவித்து உள்ளார்.

திருச்சி,

அரசுப் பள்ளி மாணவ, மாணவிகளும் எல்லாவிதமான நுழைவுத் தேர்வுகளையும் எதிர்கொள்ளும் வகையில் பாடப்புத்தகங்களின் தரம் உயர்த்தப்பட்டுள்ளது. வழக்கமாக கையாளப்படும் முறையில் இருந்து புதிய வகையில் பாடங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆசிரியர்களின் பாடம் நடத்தும் அணுகுமுறையிலும், மதிப்பீட்டு முறையிலும் மாற்றங்களைத்தாங்கி இந்தப் பாடப்புத்தகங்கள் வந்துள்ளது.

திருச்சி மாவட்டத்தில் பள்ளிக் கல்வித்துறையின் சார்பில் மாணவர்களின் நலனுக்காக அனைத்துத் திட்டங்களும் சிறப்பாக செயல் படுத்தப்பட்டு வருகிறது. திருச்சி மாவட்டத்தில் 1304 அரசுப் பள்ளிகளும், 353 அரசு உதவி பெறும் பள்ளிகளும் செயல்பட்டு வருகிறது. இப்பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசு வழங்கும் 14 வகையான விலையில்லா கல்வி உபகரணங்கள் உள்ளிட்ட தமிழக அரசின் அனைத்து திட்டங்களும் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது.

இதன்படி திருச்சி மாவட்டத்தில் கடந்த 2018-19-ம் கல்வியாண்டில் 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படித்த மாணவ, மாணவிகளுக்கு 9,13,201 விலையில்லா பாடப்புத்தகங்களும், 1 முதல் 10-ம் வகுப்பு படித்த மாணவ, மாணவிகளுக்கு 12,34,782 விலையில்லா நோட்டு புத்தகங்களும், 1 முதல் 12-ம் வகுப்பு வரையிலும் மாணவ, மாணவிகளுக்கு 99,462 விலையில்லா பஸ் பயண அட்டைகளும் 1 முதல் 8-ம் வகுப்பு வரையான மாணவ, மாணவிகளுக்கு 1,22,464 விலையில்லா சீருடைகளும் வழங்கப்பட்டுள்ளது.

1 முதல் 2-ம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவிகளுக்கு 368 விலையில்லா வண்ணக் கிரையான்களும், 3 முதல் 5-ம் வகுப்பு வரை பயின்ற மாணவ, மாணவிகளுக்கு 673 விலையில்லா வண்ணப் பென்சில்களும், 1 முதல் 10-ம் வகுப்பு வரை பயின்ற மாணவ, மாணவிகளுக்கு 1,22,176 விலையில்லா காலணிகள், 1 முதல் 12-ம் வகுப்பு வரை பயின்ற மாணவ, மாணவிகளுக்கு 1,77,030 விலையில்லா புத்தகப் பைகளும் வழங்கப்பட்டுள்ளது.

இதே போன்று நடப்பு 2019-20-ம் கல்வியாண்டில் 1 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு இதுவரை 3 லட்சத்து 10 ஆயிரத்து 984 எண்ணிக்கையில் விலையில்லா பாடப்புத்தகங்கள் பெறப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது. மாணவ, மாணவிகள் அரசு வழங்கும் உதவித்தொகை மற்றும் விலையில்லா உபகரணங்களை பெற்று நல்ல முறையில் படித்து வாழ்க்கையில் உயர்ந்த நிலைக்கு வரவேண்டும். படித்தால் மட்டுமே உயர்ந்த நிலையை எட்டமுடியும் என்பதை எண்ணி படிப்பில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும்.

மேற்கண்ட தகவலை திருச்சி மாவட்ட கலெக்டர் எஸ்.சிவராசு தெரிவித்துள்ளார்.

Next Story