ரூ.125 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட திருவானைக்காவல் மேம்பாலத்தை எடப்பாடி பழனிசாமி இன்று திறந்து வைக்கிறார்
ரூ.125 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட திருவானைக்காவல் மேம்பாலத்தை எடப்பாடி பழனிசாமி இன்று திறந்து வைக்கிறார். அணுகுசாலை பணிகளை 4 மாதங்களில் முடிக்க திட்டமிடப்பட்டு உள்ளது.
திருச்சி,
திருச்சி டவுன்-ஸ்ரீரங்கம் ரெயில் நிலையங்களுக்கு இடையே திருச்சி- சென்னை நெடுஞ்சாலையில் ரெயில்வே மேம்பாலம் அகலம் குறைந்த நிலையில் மிகவும் பழமையானதாக இருந்ததால் அதற்கு பதிலாக புதிய மேம்பாலம் கட்டுவதற்கு ரெயில்வே இலாகா அனுமதி வழங்கியது. இதனை தொடர்ந்து பாலத்திற்கு தேவையான நிலங்களை ரூ.69 கோடியில் கையகப்படுத்தியது உள்பட மொத்த மதிப்பீடு ரூ.125 கோடியில் பாலம் கட்டுவதற்கான பூர்வாங்க பணி கடந்த 2013-ம் ஆண்டு தொடங்கப்பட்டது.
இந்த பாலத்தின் நீளம் 907 மீட்டர். அகலம் 17.20 மீட்டராகும். பாலத்தை தாங்கும் தூண்களின் எண்ணிக்கை 48. முதல் கட்ட பணியாக கடந்த 2016-ம் ஆண்டு அணுகு சாலை பயன்பாட்டுக்கு வந்ததை தொடர்ந்து 2016-ம் ஆண்டு முதல் மேம்பால பணிகள் நடந்து வந்தன. தற்போது மேம்பால பணிகள் மட்டும் முழுமையாக முடிவடைந்து உள்ளன. ஆனால் திருச்சியில் இருந்து ஸ்ரீரங்கம் செல்வதற்கான அணுகுசாலை, கல்லணை சாலையுடன் இணைப்பதற்கான அணுகுசாலை, திருவானைக்காவல் பகுதிக்குள் செல்வதற்கான அணுகுசாலை பணிகள் இன்னும் தொடங்கப்படவே இல்லை.
ஆனாலும் இந்த பாலம் மட்டும் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து விடப்பட இருக்கிறது. முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்னை தலைமை செயலகத்தில் இருந்த படியே இன்று (புதன்கிழமை) காலை 9.30 மணிக்கு காணொலி காட்சி மூலம் இந்த பாலத்தை திறந்து வைக்கிறார்.
இன்று திறக்கப்பட இருப்பதையொட்டி திருச்சி மாவட்ட கலெக்டர் எஸ்.சிவராசு நேற்று திருவானைக்காவல் மேம்பாலத்திற்கு வந்து ஆய்வு செய்தார். அப்போது திருச்சி மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன், மாநகர போலீஸ் கமிஷனர் அமல்ராஜ், ஸ்ரீரங்கம் உதவி கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார், நெடுஞ்சாலை துறை கோட்ட பொறியாளர் வேல் முருகன், உதவி கோட்ட பொறியாளர் மீனாட்சி, தாசில்தார் கனமாணிக்கம் உள்பட அதிகாரிகளுடன் பாலத்தில் வாகனங்களை போக்குவரத்துக்கு எவ்வாறு அனுமதிப்பது என்பது பற்றி ஆலோசனை நடத்தினார்.
பின்னர் கலெக்டர் சிவராசு நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
மேம்பாலம் ஸ்ரீரங்கம் பகுதியில் முடிவடையும் இடத்தில் ரவுண்டானா அமைக்கப்படும். மேலும் பாலத்தில் விபத்தை தடுக்க வேகத்தடைகள் அமைக்கப்படும். கோர்ட்டில் வழக்குகள் நிலுவையில் இருந்ததால் அணுகுசாலைக்கான நிலம் கையகப்படுத்துவதில் காலதாமதம் ஏற்பட்டு உள்ளது. தற்போது கோர்ட்டு வழக்குகள் எல்லாம் முடித்து வைக்கப்பட்டு விட்டன. நில உரிமையாளர்களுக்கு இழப்பீடு தொகை வழங்கப்பட்டதும் அணுகுசாலை அமைக்கும் பணிகள் தொடங்கும். பணி தொடங்கப்பட்ட காலத்தில் இருந்து 4 மாத காலத்தில் உறுதியாக முடிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story