காவிரியின் குறுக்கே எத்தனை தடுப்பணைகள் கட்டப்பட உள்ளன? பொதுப்பணித்துறைக்கு மதுரை ஐகோர்ட்டு கேள்வி


காவிரியின் குறுக்கே எத்தனை தடுப்பணைகள் கட்டப்பட உள்ளன? பொதுப்பணித்துறைக்கு மதுரை ஐகோர்ட்டு கேள்வி
x
தினத்தந்தி 19 Jun 2019 4:45 AM IST (Updated: 19 Jun 2019 3:14 AM IST)
t-max-icont-min-icon

காவிரியின் குறுக்கே எத்தனை தடுப்பணைகள் கட்டப்பட உள்ளன? என்று பொதுப்பணித்துறைக்கு மதுரை ஐகோர்ட்டு கேள்வி எழுப்பியது.

மதுரை,

திருச்சி மாவட்டம் உத்தமர்சீலியை சேர்ந்த விஜயகுமார், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:–

காவிரி மற்றும் கொள்ளிடம் ஆறுகள் முக்கொம்பில் பிரிந்து கல்லணையில் ஒன்று சேர்கின்றன. இதற்கு இடையில் உள்ள முக்கொம்பு முதல் கல்லணை வரையிலான இடம் தீவுப்பகுதியாக அமைந்துள்ளது. இந்த பகுதியில் மேலூர், ஸ்ரீரங்கம், திருவானைக்கோவில், கொண்டையம்பேட்டை, திமிராயசமுத்திரம், பொன்ரங்கபுரம், பனையபுரம், கெளத்தரசநல்லூர், கம்பரசன்கோட்டை பகுதியில் காவிரி ஆற்றில் ஏற்கனவே தடுப்பணைகள் அமைந்துள்ளன. மீண்டும் உத்தமர்சீலி கிராமத்தில் இருந்து காவிரி ஆற்றின் குறுக்காக வேங்கூர்பூசத்துறை படித்துறை கிராமத்திற்கும், கிளிக்கூடிலிருந்து கொள்ளிடம் ஆற்றின் குறுக்காக இடையாற்றிமங்கலம் தண்ணீர்பந்தல் கிராமத்திற்கும் தடுப்பணை அமைத்தால் இந்த பகுதியில் வசிக்கும் விவசாயிகளுக்கும், விவசாயத்துக்கும், குடிநீருக்கும் உதவியாக இருக்கும்.

2011–ம் ஆண்டில் கிளிக்கூடு கிராமத்தில் இருந்து கொள்ளிடம் ஆற்றின் குறுக்காக இடையாற்றிமங்கலம் தண்ணீர்பந்தல் கிராமத்திற்கு தரைப்பாலம் அமைக்கும் பணி நடந்தது. ஆனால் அது முழுமையாக நிறைவேறவில்லை.

காவிரி, கொள்ளிடம் ஆறுகளில் மணல் குவாரிகள் அமைத்து ஆழமாக மணல் அள்ளப்பட்டுள்ளது. இதனால் காவிரி மற்றும் கொள்ளிடம் ஆறுகளின் குறுக்காக செல்லும் பாலங்கள் வலு இழந்துள்ளன. திடீரென வெள்ளம் வரும்பட்சத்தில் இந்த பாலங்கள் கடும் சேதத்துக்கு ஆளாகும் நிலை உள்ளது. எனவே உத்தமர்சீலி கிராமத்தில் இருந்து வேங்கூர்பூசத்துறை படித்துறை கிராமம் வரையிலும், கிளிக்கூடு முதல் இடையாற்றுமங்கலம் தண்ணீர்பந்தல் கிராமம் வரையிலும் என 2 இடங்களில் தடுப்பணைகள் அமைக்க உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறியிருந்தார்.

அந்த வழக்கு நீதிபதிகள் சத்தியநாராயணன், புகழேந்தி ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.

முடிவில், காவிரி மற்றும் கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே எத்தனை தடுப்பணைகள் கட்டப்பட்டுள்ளன? மேலும் எத்தனை தடுப்பணைகள் கட்டுவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது? என்பது குறித்து பொதுப்பணித்துறையின் முதன்மை செயலாளர் (நீர் ஆதாரம்) பதில் அளிக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.


Next Story