சுருக்கு வலை பயன்படுத்தும் மீனவர்களுக்கு இழப்பீடு; அன்பழகன் எம்.எல்.ஏ. வலியுறுத்தல்


சுருக்கு வலை பயன்படுத்தும் மீனவர்களுக்கு இழப்பீடு; அன்பழகன் எம்.எல்.ஏ. வலியுறுத்தல்
x
தினத்தந்தி 19 Jun 2019 4:15 AM IST (Updated: 19 Jun 2019 3:24 AM IST)
t-max-icont-min-icon

சுருக்கு வலையை பயன்படுத்தும் மீனவர்களுக்கு இழப்பீடு வழங்கவேண்டும் என்று அன்பழகன் எம்.எல்.ஏ. கூறியுள்ளார்.

புதுச்சேரி,

புதுவை அ.தி.மு.க. சட்டமன்ற கட்சி தலைவர் அன்பழகன் எம்.எல்.ஏ. விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

மீன் உற்பத்தி வளத்தை குஞ்சு பருவத்திலேயே முழுமையாக அழிக்கும் சுருக்குவலை, மடிப்பு வலை, இரட்டை மடிப்பு வலைகளை மீனவர்கள் பயன்படுத்தக்கூடாது என மத்திய அரசு 3 வருடங்களுக்கு முன்பு சட்டம் இயற்றி உத்தரவு பிறப்பித்தது. மத்திய அரசின் தடை உத்தரவினை தமிழகம், கேரளா, ஆந்திரா, ஒடிசா, குஜராத், மராட்டியம் உள்ளிட்ட பல மாநிலங்களில் மீனவர்கள் சுருக்குவலை, மடிப்பு வலைகளை பயன்படுத்த தடை சட்டத்தை கொண்டுவந்தன.

ஆனால் புதுச்சேரியை ஆளும் காங்கிரஸ் அரசு வழக்கம்போல் இப்பிரச்சினையிலும் எந்தவித உத்தரவினையும் பிறப்பிக்காததால் புதுச்சேரியை சேர்ந்த சில மீனவர்கள் இத்தகைய வலைகளை பயன்படுத்தி மீன்பிடித்து வந்தனர். இந்த வலைகளை பயன்படுத்தி தமிழக பகுதியில் மீன்பிடிக்கும் புதுச்சேரி மீனவர்களுக்கு தமிழக மீனவர்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

இந்தநிலையில் 3 தினங்களுக்கு முன்பு புதுச்சேரி மீனவர்களின் சுருக்கு, மடிப்பு வலைகளை தமிழக அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். இதனால் புதுச்சேரி மீனவர்கள் சிரமத்துக்கு ஆளாகி உள்ளனர். இதற்கு உரிய உத்தரவு பிறப்பிக்காத புதுச்சேரி அரசின் அலட்சியமே காரணமாகும். நாடு முழுவதும் சுருக்கு வலை பயன்படுத்த மீனவர்களுக்கு அந்தந்த மாநில அரசும், மத்திய அரசும் தடை விதித்திருந்த நிலையில் புதுச்சேரி அரசு தொடர்ந்து இந்த வி‌ஷயத்தில் மவுனம் காத்து மீனவர்களை தவறான பாதைக்கு கொண்டு சென்றுள்ளது.

இதற்கு மேலும் புதுச்சேரி அரசு மவுனம் காக்காமல் சுருக்குவலை, மடிப்பு வலை, இரட்டை மடிப்பு வலைகளுக்கு உடனடியாக தடை விதிக்கவேண்டும். இந்த வலைகளை அரசின் அலட்சிய போக்கினால் பெருத்த முதலீடு செய்து பயன்படுத்தி வரும் மீனவர்களுக்கு உரிய இழப்பீட்டு தொகையை வழங்கவேண்டும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் அன்பழகன் எம்.எல்.ஏ. கூறியுள்ளார்.


Next Story