கடலில் மீன்பிடிக்கச்சென்றபோது காசிமேடு மீனவர்களை தேடும் பணி தீவிரம்; கப்பலில் ஏறி உயிர் தப்பினரா? அதிகாரி பேட்டி


கடலில் மீன்பிடிக்கச்சென்றபோது காசிமேடு மீனவர்களை தேடும் பணி தீவிரம்; கப்பலில் ஏறி உயிர் தப்பினரா? அதிகாரி பேட்டி
x
தினத்தந்தி 19 Jun 2019 10:45 PM GMT (Updated: 19 Jun 2019 8:06 PM GMT)

கடலுக்கு மீன்பிடிக்கச்சென்றபோது மாயமான காசிமேடு மீனவர்களை தேடும்பணி தீவிரமாக நடந்து வருகிறது. கப்பலில் ஏறி மீனவர்கள் உயிர் தப்பினரா? என்பது குறித்து விசாரித்து வருவதாக அதிகாரி தெரிவித்தார்.

திருவொற்றியூர்,

சென்னை காசிமேடு காசிபுரத்தை சேர்ந்தவர் நந்தன் (வயது 65). இவருக்கு சொந்தமான பைபர் படகில் கடந்த 4–ந்தேதி அதே பகுதியை சேர்ந்த புகழேந்தி (59), கே.மதி (48), ஸ்டீபன் (32), பால்ராஜ் (50), துரை (55), கருத்தக்கண்ணு (65), மதி (53) மற்றும் சுனில்குமார் (38) ஆகிய 8 பேர் மீன்பிடிக்க கடலுக்குள் சென்றனர்.

துறைமுகத்தில் இருந்து 25 கடல்மைல் தூரத்தில் மீன்பிடித்தபோது காசிமேடு மீனவர்கள் திடீரென மாயமானார்கள். 10–ந்தேதி கரைக்கு திரும்ப வேண்டிய மீனவர்கள் திரும்பி வராததால் படகு உரிமையாளர் நந்தன் காசிமேடு மீன்துறை உதவி இயக்குனர் வேலனிடம் புகார் அளித்தார்.

இதையடுத்து கடலோர காவல் படையினர் ஹெலிகாப்டர் மூலம் தேடியபோது ஆந்திர மாநில கடலோரத்தில் படகு கவிழ்ந்து கிடப்பது தெரியவந்தது. அதில் சென்ற மீனவர்களின் நிலை என்ன? என்பது தெரியவில்லை.

இந்தநிலையில் மாயமான மீனவர்களின் குடும்பத்தினர் காசிமேடு மீன்துறை உதவி இயக்குனர் அலுவலகத்தில் இரவு, பகலாக காத்து கிடக்கின்றனர். மீனவர்களை கண்டுபிடித்து தரக்கோரி மீன் வளத்துறை அதிகாரிகளிடம் அவர்கள் கண்ணீர் வடித்து கோரிக்கை வைத்துள்ளனர்.

இதற்கிடையே தி.மு.க. மாநில மீனவரணி செயலாளர் கே.பி.பி.சாமி எம்.எல்.ஏ. மாயமான மீனவர்களின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும் அவர்களுக்கு தலா ரூ.5 ஆயிரம் வழங்கினார்.

மீனவர்கள் மீட்பு நடவடிக்கை குறித்து காசிமேடு மீன்துறை உதவி இயக்குனர் வேலன் கூறியதாவது:–

ஆந்திரா, ஒடிசா, மேற்கு வங்காள மாநில மீன்வளத்துறை அதிகாரிகளுக்கும், வங்காளதேச நாட்டு அதிகாரிகளுக்கும் மாயமான மீனவர்கள் குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது. மீனவர்கள் கடலில் தத்தளித்தபோது சர்வதேச கடல் எல்லையில் சென்ற கப்பல் எதிலாவது ஏறி உயிர் தப்பினார்களா? என்ற கோணத்தில் சம்பந்தப்பட்ட துறைகளுக்கு தகவல் அனுப்பி விசாரித்து வருகிறோம்.

ஒவ்வொரு 3 மணி நேரத்திற்கு ஒரு முறை கடலோர காவல் படையினர் உதவியுடன் தகவல்கள் பெற்று கொண்டு இருக்கிறோம். எனவே தேடுதல் பணி தீவிரமாக நடக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story