சோலார் உலர் கலன்கள், கறவை மாடுகள் வாங்க பழங்குடியின விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் கலெக்டர் தகவல்


சோலார் உலர் கலன்கள், கறவை மாடுகள் வாங்க பழங்குடியின விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 20 Jun 2019 4:15 AM IST (Updated: 20 Jun 2019 1:51 AM IST)
t-max-icont-min-icon

சோலார் உலர் கலன்கள், கறவை மாடுகள் வாங்க பழங்குடியின விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.

திருச்சி,

பழங்குடியினர் நலத்துறை மூலம் திருச்சி மாவட்டத்தில் வறுமை கோட்டிற்கு கீழ் வசிக்கும் பழங்குடி இன விவசாயிகளுக்கு, 2018-19-ம் ஆண்டிற்கான விரிவான பழங்குடியினர் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 100 பேருக்கு சூரிய ஒளியில் இயங்கும் சோலார் உலர்கலங்கள் மற்றும் 25 பேருக்கு கறவை மாடுகள் முழு மானியத்தில் வழங்கப்பட உள்ளது. மேலும் பழங்குடியின மக்கள் நடத்தி வரும் சுய உதவிக்குழுக்கள் மூலம் மண்புழு உரம் தயாரித்து விற்பனை செய்திடவும், காகிதம் மற்றும் துணிப்பை தயாரித்து விற்பனை செய்திடவும் ஆர்வமுள்ள சுய உதவிக்குழுக்களுக்கு கடன் வழங்கப்பட உள்ளது.

இத்திட்டதின் கீழ் சோலார் உலர் கலன்கள், கறவை மாடுகள் மற்றும் கடன் பெற விண்ணப்பிக்க விரும்பும் பயனாளிகள் திருச்சி மாவட்டத்தில் வறுமைக்கோட்டிற்கு கீழ் வசிப்பவராகவும் பழங்குடியினர் இனத்தை சேர்ந்தவராகவும் இருக்க வேண்டும். விதவைகள், மாற்றுத்திறனாளி மற்றும் திருநங்கை ஆகியோருக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

விண்ணப்பிக்கும் பயனாளிகள் கிராம ஊராட்சியில் நிரந்தரமாக வசிப்பவராகவும், 60 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். விண்ணப்பம் செய்யும் பயனாளியோ அல்லது அவரது குடும்பத்தில் எவரும் மத்திய, மாநில அரசிலோ அல்லது ஏதேனும் நிறுவனத்தின் கூட்டுறவு சங்கத்தில் பணிபுரிபவராகவோ இருக்கக்கூடாது. அரசின் எந்த திட்டத்திலும் பயன்பெறாதவராக இருக்க வேண்டும். இந்த திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கும் பயனாளிகள் தகுதி மூப்பு அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.

இதற்கான விண்ணப்பத்துடன் பாஸ்போர்ட் அளவு புகைப்படம்-2, சாதிச்சான்று, வருமானச்சான்று, இருப்பிடச்சான்று, சூரிய ஒளி சக்தி உலர்கலங்கள் பெறுவதற்கு நிலத்திற்கான பட்டா புத்தகம், நிலத்தின் சிட்டா மற்றும் அடங்கல், குடும்ப அட்டை, ஆதார் அட்டை, வங்கி கணக்கு புத்தகம், வறுமைக் கோட்டிற்கு கீழ் வசிப்பதற்கான சான்று ஆகியவற்றின் நகல்களுடன் இணைக்கப்பட்ட விண்ணப்பத்தை துறையூர் பழங்குடியினர் நலத்திட்ட அலுவலகத்தில் அடுத்த மாதம்(ஜூலை) 17-ந் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

இந்த தகவலை திருச்சி மாவட்ட கலெக்டர் எஸ். சிவராசு தெரிவித்துள்ளார்.

Next Story