திருவள்ளூர் அருகே குப்பையை கொளுத்தும் போது தீ பரவி 19 குடிசைகள் சேதம்; கியாஸ் சிலிண்டர்கள் வெடித்து சிதறியதால் பரபரப்பு


திருவள்ளூர் அருகே குப்பையை கொளுத்தும் போது தீ பரவி 19 குடிசைகள் சேதம்; கியாஸ் சிலிண்டர்கள் வெடித்து சிதறியதால் பரபரப்பு
x
தினத்தந்தி 20 Jun 2019 4:00 AM IST (Updated: 20 Jun 2019 1:58 AM IST)
t-max-icont-min-icon

திருவள்ளூர் அருகே குப்பையை கொளுத்தும் போது தீ பரவி 19 குடிசைகள் சேதம் அடைந்தன. இதில் 10-க்கும் மேற்பட்ட கியாஸ் சிலிண்டர்கள் வெடித்து சிதறியதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருவள்ளூர்,

திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூர் ஒன்றியம் பேரம்பாக்கம் அருகே உள்ளது கீழச்சேரி அருந்ததியர்புரம். இங்குள்ள 200-க்கும் மேற்பட்ட குடிசைகளில் ஏராளமானோர் வசித்து வருகின்றனர். நேற்று காலை 10 மணியளவில் கீழச்சேரி அருந்ததியர்புரத்தை சேர்ந்த சென்சையா (வயது 55) என்பவர் தன்னுடைய குடிசை அருகே குப்பைகளை தீயிட்டு கொளுத்தி கொண்டிருந்தார். காற்று பலமாக வீசியதை தொடர்ந்து குப்பையில் இருந்த தீ அவரது குடிசையில் பற்றி தீப்பிடித்தது. இதனால் பதறிப்போன சென்சையா தீயை அணைக்க முயன்றார். காற்று பலமாக வீசியதால் தீ மேலும் பரவி அவரது குடிசை முழுவதும் எரிந்து சேதம் அடைந்தது.

இதில் அங்கு இருந்த துணிமணிகள், பீரோ, கட்டில்கள், வீட்டு உபயோக பொருட்கள், ரேஷன் கார்டு, ஆதார் கார்டு போன்றவைகளும் தீயில் கருகியது.

மேலும் அவரது குடிசையில் இருந்த கியாஸ் சிலிண்டர் வெடித்து சுமார் 10 அடிக்கு மேல் தூக்கி வீசப்பட்டது. அருகாமையில் வசித்து வந்த ஜெகன், மாலா, வெங்கடேஷ், சூர்யா, கவுதமி, ராமு, சத்யா, புஷ்பா, சபீனா, அமுல்ராஜ், பத்மா, முனியம்மாள், சீனிவாசன், நரசம்மாள், மகேஸ்வரி, நாகராஜ், உதயா, வெங்கட்டம்மாள் ஆகியோரது குடிசைகளிலும் தீ பரவி மளமளவென எரிந்தது. இதனால் பாதிக்கப்பட்ட மக்கள் தீயை அணைக்க முயன்றனர். அங்கு இருந்த 10-க்கும் மேற்பட்ட கியாஸ் சிலிண்டர்கள் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறின. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பலத்த தீ காரணமாக கரும்புகை ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் தங்கள் வீடுகளில் இருந்த உடைமைகளை எடுக்காமல் உயிர் பிழைத்தால் போதுமென கருதி பாதுகாப்பான இடத்திற்கு சென்றனர்.

பொதுமக்கள் மின்வாரிய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்ததை தொடர்ந்து அந்த பகுதியில் உடனடியாக மின்சார வினியோகம் துண்டிக்கப்பட்டது. இதுகுறித்து தகவல் கிடைத்ததும் பேரம்பாக்கம், திருவள்ளூர், ஸ்ரீபெரும்புதூர் போன்ற இடங்களில் இருந்து தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு தீயணைப்பு வீரர்கள் சுமார் 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் 19 குடிசைகளில் இருந்த பீரோ, கட்டில், துணிமணிகள், மின்சாதன பொருட்கள் மற்றும் தங்க நகைகள், பணம் போன்றவை தீயில் கருகியது.

மேலும் இந்த தீவிபத்தில் ஒரு ஆட்டோ முழுமையாக எரிந்து தீயில் கருகியது. அது மட்டுமல்லாமல் அந்த குடிசைகளை சுற்றி இருந்த 20-க்கும் மேற்பட்ட மரங்களும் தீயில் கருகின. இது குறித்து தகவல் அறிந்ததும் சப்-கலெக்டர் பெருமாள், திருவள்ளூர் தாசில்தார் சீனிவாசன், மண்டல துணை தாசில்தார் வெங்கடேஷ், கிராம நிர்வாக அலுவலர் லோகநாதன் மற்றும் திரளான வருவாய்த்துறையினர், திருவள்ளூர் துணை போலீஸ் சூப்பிரண்டு கங்காதரன் தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டு மீட்பு பணியில் மும்முரமாக ஈடுபட்டு நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

Next Story